Abstract:
பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளில் வளங்கள் இன்றியமையாதனவாக
அமைகின்றன. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் வளங்கள் பயன்பாட்டிற்கு உட்படும்
தன்மை குறைவாகவே காணப்படுகின்றன. குறித்த ஒரு நாடு வளங்களைப்
பூரணமாகவும் வினைத்திறனுடையதாகவும் பயன்படுத்தப்படும் போது
அப்பொருளாதாரத்தின் வளத்திரட்சி அதிகரிக்க ஏதுவாகின்றது. இதனால் விரைவான
பொருளாதார வளர்ச்சியினையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ச்சிடைந்து வரும்
இலங்கையிலும் பொருளாதார உற்பத்திக்கான நிலவளங்களைச் சிறந்த முறையில்
இனங்கண்டு அவற்றை உற்பத்தி செயன்முறைகளில் ஈடுபடுத்தும் போது
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலையினையும் வெகுவாகக் குறைக்க முடியும்.
அவ்வகையில் இவ்வாய்வானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின்
பௌதீகவளங்களில் நிலவளப்பயன்பாட்டை இனங்காண்பதாகவும் அவற்றை
வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகளை முன்வைப்பதாகவும் அதன்
மூலம் பிரதேச அபிவிருத்திக்கான உத்திகளையும் ஆய்வு செய்கின்றது. இவ்வாய்வு
முதலாம் இரண்டாம் நிலைத்தரவுகளை பயன்படுத்தி அளவு சார் மற்றும் பண்பு சார்
ஆய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதன்நிலைத் தரவுகளாக நேரடி அவதானம், நேர் காணல் கள ஆய்வு ஆகியன
பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவு மூலங்களாக தென்மராட்சிப்
பிரதேசசெயலக கையேடு,நில அளவைத்திணைக்கள அறிக்கைகள், நகரநசபை
மற்றும் பிரதேசசெயலக கையேடுகள், இணையத்தளங்கள், மற்றும் இலத்திரனியல்
ஊடகங்கள், நூல்களும் சஞ்சிகைகளும் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின்
நோக்கம் மற்றும் முடிவிற்கிணங்க நில வளப்பயன்பாடுகள்,
முறையாகஇனங்காணப்பட்டதோடு அவற்றை வினைத்திறனாக பயன்படுத்திக்கொள்ள
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முகாமைச் செயற்பாடுகள், பெறுபேறுகள்
என்பனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதன்மூலம் பிரதேச அபிவிருத்திக்கான
தந்திரோபாயங்களையும் முன்வைக்கின்ற வகையிலேயே இவ்வாய்வு அமைகின்றது.