Abstract:
கிழக்கிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஓட்டமாவடி அறபாத் முக்கிய இடத்தைப்
பெறுபவர். குறிப்பாக தற்கால சிறுகதை எழுத்தாளர்களில் இவரின் படைப்புக்கள்
சமூகத்தை பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. பிறந்த இடமாகிய ஓட்டமாவடியையே தன்
பெயரின் அடைமொழியாகக் கொண்டு ஆக்கங்களைப் படைக்கும் ஓட்டமாவடி அறபாத்
கிழக்கு மாகாணத்தின் பண்பாடுகளை செம்மையாகவும் எளிமையாகவும்
எடுத்துக்காட்டுவதில் வல்லவர். அந்தவகையில் அவரது சிறுகதைகளுள் ஒன்றான
“மூத்தம்மா” எனும் சிறுகதை வெளிப்படுத்தும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின்
பண்பாடுகளை அடையாளப்படுத்துவது;ம் அவை ஏனைய பிரதேச முஸ்லிம்
மக்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளன என்பதை இனங்காண்பதும் இவ்வாய்வின்
நோக்கங்களாகும். “மூத்தம்மா” எனும் சிறுகதை சமீபகாலமாக பிரபல்யமடைந்து வரும்
ஒரு படைப்பாக உள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரணதர
மாணவர்களுக்கு இச்சிறுகதை ஒரு பாடமாக இணைக்கப்பட்டுள்ளமையே இதற்கு
முக்கிய காரணமாகும். கிழக்கிலங்கை முஸ்லி;களின் மத்தியில் உள்ள பண்பாடுகளை
இதில் பல இடங்களில் தொட்டுக் காட்டுகின்றார் அறபாத். இப்பண்பாடு கிழக்கிலங்கை
முஸ்லி;களுக்கு மட்டும் உரித்தானதாகவே காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய
பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அறியாத பல வழமைகளையும்,
சொற்பிரயோகங்களையும் அறபாத் வெளிப்படுத்தியுள்ளார். இது அவருக்கே உரித்தான
பாணி. எடுத்துக்காட்டாக, இச்சிறுகதையின் தலைப்பாக அமையும் மூத்தம்மா எனும்
சொல் பாட்டியைக் குறிக்கும். மூத்தம்மா எனும் சொல்லின் பொருள் தொடர்பாக
ஏனைய பிரதேச முஸ்லிம்களிடம் கேட்டபோது அவர்களுள் பெரும்பாலானோர்
அச்சொல் பாட்டியையே குறிப்பிடுகின்றது என்பதை அறியாதிருந்தனர். மேலும், சகுணம்
பார்த்தல் போன்ற நம்பிக்கை சார்ந்த விடயங்களையும் கதைக்கேற்ற விதத்தில்
எடுத்துக்காட்டும் அறபாத்தின் மொழிநடையே கிழக்கிலங்கையின் மண்வாசனையை
பிரதிபலிப்பதாகவுள்ளது. இவ்வடிப்படையில் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களுக்கிடையே
நிலவும் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை இச்சிறுகதை வெளிப்படுத்த
முனைகின்றது என்பது இவ்வாய்வின் கருதுகோளாக அமைகின்றது.இச்சிறுகதையில்
இடம் பெறும் பண்பாட்டுக் கூறுகளை கிழக்கிலங்கைப் பண்பாட்டுக் கூறுகளுடன்
இணைத்து உண்மைத் தன்மையை ஆராய்வது இவ்வாய்வுக்கு வலு சேர்க்கும் என்ற
அடிப்படையில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடு தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச
மக்களிடம் சென்று பெறப்பட்ட நேர்காணல் தரவுகள் இவ்வாய்வின் முதனிலைத்
தரவுகளாக அமைந்தன. இவ்வாறான தரவுகளைப் பெறுவதற்கு 50 மாதிரிகள்
(எழுமாற்று முறையில் அமைந்த மாதிரிகள்) தெரிவு செய்யப்பட்டன. மாதிரிகள்
அனைவரும் கிழக்கிலங்கையைச் சேர்ந்த, அதிகமாக ஓட்டமாவடியைச் சேர்ந்த
முஸ்லிம் மக்களாவர். இரண்டாம் நிலைத் தரவுகளாக, பண்பாடு, கிழக்கிலங்கை
பண்பாடு தொடர்பான நூல்கள், கட்டுரைகள் என்பன பயன்பட்டன.முடிவாக, ஓட்டமாவடி
அறபாத்தின் “மூத்தம்மா” சிறுகதை குடும்ப உறவுகளின் தூய்மையை
உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முனையும் ஒரு படைப்பு. இருப்பினும்
கிழக்கிலங்கையின் தனித்துவமான வழமைகளையும் நம்பிக்கைகளையும் செம்மையாக
அடையாளங்காட்டும் ஒரு ஆக்கமாகவும் அமைகின்றது.