Abstract:
உலகின் பல்வேறு மொழிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயச்
சூழ்நிலையில் பாரிய காவியங்கள் தோன்றியுள்ளதை உலக இலக்கிய வரலாறுகள்
காட்டுகின்றன. தமிழ் இலக்கிய மரபிலும் காவிய வடிவம் முக்கியமான
ஒன்றாகவுள்ளது. சோழர் காலத்தைத் தமிழின் ‘காவிய காலம்’ என இலக்கிய
வரலாற்றாசிரியர்கள் அழைப்பர். நிலப்பிரபுத்துவத்தின் உச்ச நிலையில் தோன்றிய
காவியம் அச்சமுதாய அமைப்பின் நலிவோடு மறைந்துபோன இலக்கிய வடிவமாக
மாறியது.பழைய காவிய வடிவத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதாக இருபதாம்
நூற்றாண்டுக்கே உரிய புதிய காவிய வடிவமொன்று தோன்றி வளர்ச்சியடைகின்றது.
நவீன காவிய மரபு பாரதியுடனேயே ஆரம்பிக்கின்றது எனலாம். இவரைத் தொடர்ந்து
தமிழ்நாட்டிலும்,ஈழத்திலும் நவீன காவிய மரபின் வளர்ச்சியைக் காணலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான கவிஞர்களின் நவீன காவியங்கள்
கற்பனை உலகு சார்ந்தவையாகவே அமைகின்றன. ஈழத்துக் கவிஞர்களின் நவீன
காவியப் படைப்புக்கள், நவீன வாழ்க்கை பற்றிய உணர்வினைத் தமது
அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பதிய
தன்மைகளைப் பெற்றுள்ளன. சமூகப் பிரச்சினைகளே அவற்றின் பொருளாக உள்ளன.
ஈழத்தைப் பொறுத்தவரை ஈழக் கவிஞர்கள் பலர் நவீன காவியத்தைச் சமூகப்
பிரச்சினைகளைப் பதிவுசெய்வதற்கான வடிவமாகக் கையாண்டுள்ளனர்.இந்த
வரிசையிலே பாலமுனை பாறூக்கின் ‘தோட்டுப்பாய் மூத்தம்மா’ சமூகப் பிரச்சினை
ஒன்றை முன்வைக்கும் நவீன காவிய வடிவமாக உருவாகியுள்ளது. பொருத்தமற்ற
திருமண முயற்சியினால் குடும்பப் பெண்ணுக்கு ஏற்படும் மனப் போராட்டங்கள்,
விவாகரத்து, மகிழ்ச்சியான மறுமணவாழ்வு, கணவனின் மறைவு அநாதரவான
நிலையில் வாழ்ந்து இறத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாகஇந் நவீன காவியம்
அமைகின்றது. எனினும் இந்த நவீன காவியம் சமூகப் பிரச்சினைகளை மட்டும்
பேசாமல் முஸ்லீம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவுசெய்வதாகவும்
காணப்படுகின்கிறது.அந்த வகையில் இஸ்லாமிய மக்களின் பண்பாட்டுக் கோலங்கள்
என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை அமைகிறது. குறித்த காலப்பகுதியில்
இலங்கை முஸ்லீம்களின் மத்தியில் வழக்கிலிருந்த பண்பாட்டுக் கோலங்களை இந்த
நவீன காவியம் ஆவணப்படுத்தியுள்ளது. எனினும் இதில் கூறப்பட்ட சில சடங்குகள்
இக்காலத்தில் வழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். எனவே இந் நவீன காவியத்தின்
வழி இஸ்லாமிய மக்களின் பண்பாட்டுக் கோலங்களை இனங்காண்பதோடு இன்று
வழக்கிழந்துபோன சடங்குகளின் காரணங்களையும் தேடுவதை நோக்கமாகக் கொண்டு
இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இஸ்லாமிய மக்களின் பிறப்பு முதல்
இறப்புவரையான சடங்குகளே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வில்
விவரண ஆய்வு, பகுப்பாய்வு என இருவகையான ஆய்வுநெறிகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த ஆய்வின்மூலம் இஸ்லாமியப் பண்பாட்டுக் கோலங்கள் பற்றிய தெளிவினைப்
பெற்றுக்கொள்ள முடியும்.