Abstract:
இஸ்லாமிய சட்டத்துறை மனித வாழ்வை நெறிப்படுத்தி ஒரு கட்டுக்கோப்பான
வாழ்கையை சீரமைத்து ஈருலக ஈடேற்றத்திற்காகவும் அல்லாஹ்வால்
வழங்கப்பட்ட முழுமையான வாழ்கை நெறியாகும். வஹியின் வழிகாட்டலுடன்
அமையப் பெற்றுள்ள இஸ்லாமிய சட்டங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருந்த
போதிலும் அடிப்படையான விடயங்கள் தவிர்ந்த ஷரீஆவின் கிளைச்
சட்டங்களில் வரையறைகளுடன் கூடிய வகையில் மனிதன் பகுத்தறிவை
பிரயோகிப்பதற்கும் ஒன்றுக்கொண்டு வேறுபட்ட அபிப்பிராயங்களை
முன்வைப்பதற்கும் ஷரீஆ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இத்தகைய
பிரயோக நடைமுறை இஸ்லாமிய வரலாற்றுக் காலங்கள் நெடுகிலும் இருந்து
வந்துள்ளதுடன் இதனடியாகவே வரலாற்றில் சடடத்துறை சார்ந்த பல
சிந்தனைப் பிரிவுகளும் (மத்ஹப்புகள்) தோற்றம் பெற்றன என்பதை அறிய
முடியும். இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட கருத்து முரண்பாடுகளைக்
கையாள்வதில் இஸ்லாமிய அறிஞர்கள் ஷரீவின் அடிப்படைகளைப் பேணி
நலினத்தோடும் விரிந்த மனப்பாங்கோடும் நடுநிலைப் போக்குகளைக்
கடைப்பிடித்தும் தீவரப்போக்கு மற்றும் இகழத்தக்க பிரிவினைகள் என்பவற்றை
தவிர்த்தும் வந்துள்ளனர். சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இலங்கை
போன்ற நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கருத்து முரண்பாடுகளை புரிந்து
கொள்வதிலும் அதனைக் கையாள்வதிலும் இறுக்கமான மற்றும் கடினமான
போக்குகளை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கின்றனர். இது
தொடர்பான தெளிவின்மையும் அதனை கையாளும் முறைகளில் சரியான
வழிமுறைகள் பின்பற்றப்படாமையையும் அவர்களிடையே அவதானிக்கக்
கூடியதாகவுள்ளது. இதனால் முரண்பட்டுக் கொள்ளும் அவர்கள்
மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதும்
ஷரீஆவின் சட்டங்களைப் பின்பற்றுவதில் அலட்சியம் காணப்படுவதும்
அண்மைக் காலமாக அவதானிக்கப்பட்டு வரும் விடயமாகும். எனவே இந்த
ஆய்வு ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்ட கருத்து முரண்பாடுகள் பற்றிய
தெளிவையும் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் அதனை எவ்வாறு
கையாள வேண்டும் என்ற புரிதலையும் அதிலுள்ள நடைமுறை ரீதியான
சவால்களையும் தடைகளையும் விளக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளை ஆய்வாளர்கள்
அடிப்படையாகக் கொண்டு விமர்சன ரீதியாக பகுப்பாய்வுக்குட்படுத்தி பண்பு
மற்றும் அளவு சார் வழிமுறைகளினூடாக பகுப்பாய்வு செய்துள்ளனர். முதலாம்
நிலைத்தரவுகளில் நேரடி நேர்காணல், ஒழுங்கமைக்கப்பட்ட
குழுக்கலந்துரையாடல் என்பன பயன்படுத்தப்படுவதுடன் நூல்கள், சஞ்சிகைகள்
மற்றும் இணையத்தளங்கள் என்பனவும் இரண்டாம் நிலைத் தரவுகளில்
கையாளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகவல்கள் SPSS முறையின் மூலம்
பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையாக வாழும் இலங்கை
முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்ட கருத்து முரண்பாடுகள் தொடர்பான
தெளிவினை பெற்றுக் கொள்வதற்கும் அதனை நடைமுறை சார்ந்த
சவால்களை இனங்காணவும் அதன் அணுகு முறைகளை புரிந்து அவற்றைப்
பேணி நடப்பதற்கும் இவ்வாய்வு துணை செய்யும் என்பது அதன்
எதிர்பார்க்கப்படும் விளைவுகளாகும்.