Abstract:
விளையாட்டு என்பது பல்வேறு திறன் உடைய மனிதனை உருவாக்கும் ஒரு
இயற்கையான துறையாகும். “பலமுள்ள ஒரு விசுவாசி சிறந்தவன் ” எனும் நபிமொழி
வாசகத்துக்கு; அமைவாக பௌதீக பலம் கொண்ட மனிதனை ஏற்படுத்தவல்லது
விளையாட்டுத்துறை என்பதால் இஸ்லாத்திலும் அது ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இஸ்லாமியகண்ணோட்டத்தில் விளையாட்டுத்துறையில் ஈடுபடுதலையும்
அதன் முக்கியத்துவத்தினையும் பரீசிலிப்பது இவ்வாய்வின் பிரதானமான
குறிக்கோளாகும். பண்புரீதியாக இவ்வாய்வானது ஆய்வுக் குறிக்கோளினை அடைய
இஸ்லாத்தின் மூல ஆவனங்களான அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், செந்நெறிகால
(Classical) இஸ்லாமிய இலக்கியங்கள் இதற்கால முஸ்லிம் சிந்தனையாளர்களின்
எழுத்துக்கள் என்பவற்றோடு விளையாட்டுத்துறை சார்ந்த இலக்கியங்களையும்
மீளாய்வுக்குற்படுத்துகின்றது. விளையாட்டுத்துறையின் குறிக்கோள்களுக்கும்
இஸ்லாமிய இலட்சியங்களுக்குமிடையில் வலுவான இனக்கப்பாடு காணப்படுவது
என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். ‘மகாசித் ஷரியா’வின்
குறிக்கோள்களை அடைவதற்குத் தேவையான மனிதனது ஆரோக்கியம்,
செயற்பாட்டுத்திறன், சுயகட்டுப்பாடு, குறிக்கோள்களை அடைதல், சமூக ஈடுபாடு,
தலைமத்துவபண்பு, நேரமுகாமைத்துவம் போன்ற திறன்களை ஏற்படுத்துவதற்கு
விளையாட்டு துணைசெய்கிறது. நீச்சல், குதிரை ஓட்டம், அம்பு எறிதல் போன்ற
விளையாட்டுகளை இஸ்லாமிய மூல ஆவணங்களில் ஒன்றான நபிமொழி
நேரடியாகவே குறிப்பிட்டு ஊக்கப்படுத்துகின்றது. விளையாட்டுத்துறையில்
முஸ்லிம்களின் பங்குபற்றுதலை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்ச்சிக்கு இந்த
ஆய்வு ஆதாரமாக அமையும்.