Abstract:
யாழ்ப்பாணப் பிரதேமானது தனக்கெனத்தொரு நீண்டவரலாற்றுப் பாரம்பரியத்தினைக்
கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்
கொண்ட, பல்லினச் சமூகத்தினை உள்ளடக்கியுள்ள இப்பிரதேசத்தில், இஸ்லாமிய
மக்களுக்கென இச்சமூகத்தில் தனியானதொரு சிறப்பும் அவர்களுக்கென நீண்டதொரு
வரலாற்றுப் பாரம்பரியமும் உண்டென்பதனையும் மறுப்பதற்கில்லை. இவர்கள்
இலங்கையில் தனியானதொரு இனக்குழுவினராகக் காணப்பட்டபோதும் தமிழையே
பெருமளவிற்குத் தங்களது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்
இஸ்லாமியர்களது வருகை, அவர்களது ஆரம்பகாலக் குடியேற்றங்கள் தொடர்பாகப்
பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படாலும்கூட யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசர்களது
காலத்துடன்தான் இவர்களது ஆரம்பகாலக் குடியேற்றங்கள் நல்லூரினை அண்டிய
பிரதேசங்களில் காணப்பட்டமைக்கான ஆதாரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
ஆரம்பத்தில் வர்த்தக நோக்குடனேயே இப்பகுதிக்கு வந்த இவர்கள் காலப்போக்கில்
நிரந்தரக் குடிகளாக மாறிக்கொண்டனர். மேலும் இவர்களது குடியேற்றங்கள் தொடக்க
காலங்களில் யாழ்ப்பாணத்தில் நல்லூர், சாவகச்சேரி, மிருசுவில், எழுதுமட்டுவாள்,
கொடிகாமம், ஆனைக்கோட்டை, பருத்தித்துறை போன்ற பிரதேசங்களில்
காணப்பட்டமைகான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பியர்களது வருகைக்கு
முன்னதான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக
நடவடிக்கைகள் யாவுமே யாழ்ப்பாண அரசர்களது மேற்பார்வையில் இவர்களது
கட்டுப்பாட்டின் கீழேயே காணப்பட்டிருந்தது. இவர்கள் உள்நாட்டில் பல்வேறு
தொழில்களைச் செய்தும் அரசினது வருவாய்க்குப் பக்கபலமாகவும் திகழ்ந்தனர். பலர்
விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். சிலர் இங்கிருந்து பாதுகாப்புக்
காரணங்களுக்காகச் சென்று, வாசனைப்பொருட்கள் வியாபார நடவடிக்கைகளிலும்
ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் மன்னார், வன்னிப் பிரதேசங்களில் யானைகளைப் பிடிப்பதும்
அவற்றினை யாழ்ப்பாண அரசர்களுக்கு வழங்குவதும், விற்பனை செய்வதனையும்
பரம்பரையாகச் செய்துவந்தனர். குதிரைகளைக் கொடுத்து யானைகளைப் பரிமாற்றம்
செய்கின்ற பண்டமாற்றிலும் ஈடுபட்டனர். மேலும் யாழ்ப்பாணத்தில் இவர்களது பாரம்பரிய
தொழில்களிலொன்றாக அக்காலப்பகுதியில் காணப்பட்ட மற்றொரு தொழிலான
முத்துக்குளித்தல் காணப்பட்டது. இஸ்லாமியர்களில் பலர் முத்துக் குளிப்பவர்களாகவும்
படகோட்டிகளாகவும் காணப்பட்ட அதேநேரத்தில் முத்து விற்பனையிலும் ஈடுபட்டு
அதிகளவு இலாபத்தினைப் பெற்றனர். யாழ்ப்பாண அரசர்களுக்கு இவர்கள் தாம் பெற்ற
வருவாயில் குறிக்கப்பட்டளவினைத் திறையாகச் செலுத்தினரென்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் முழுக்க முழுக்க வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் அமைந்த
இவ்வாய்வின் ஊடாக அக்கால யாழ்ப்பாண இஸ்லாமிய மக்களது பொருளாதார
நடவடிக்கைகளின் தன்மைகளை இனங்காண்பதும், அது யாழ்ப்பாண அரசின் வளர்ச்சிக்கு
எவ்விதத்தில் பங்களிப்புச் செய்திருந்ததென்பதனையும், வருங்கால ஆய்வாளர்களுக்கு
இவ்விடயமாக மேலதிக தகவல்களை வழங்கி ஆவணப்படுத்துவதனையும்
நோக்கங்களாகக் கொண்டுள்ளது. மேலும் இப்பகுதியில் எவரும் வரலாற்று
அணுகுமுறையின் அடிப்படையில் விரிவாகச் செல்லவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வில் முதற்தர மற்றும் இரண்டாந்தர ஆதாரங்கள் ஆய்வின் தேவை கருதிப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களில் யாழ்ப்பாண அரசர்கால இலக்கியங்கள்,
குறிப்புக்கள், ஐரோப்பியர்கால அறிக்கைகள், குறிப்புக்கள், கடிதங்கள் போன்றன பிரதான
இடத்தினைப் பிடித்துள்ளன. முதற்தர ஆதாரங்கள் சிலவற்றினை அடிப்படையாக
வைத்துப் பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள் என்பனவும்
இணையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களும் இரண்டாந்தர ஆதாரங்கள் வரிசையில்
உள்ளடங்குகின்றன. இவ்வாய்வில் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை யாதெனில்
இஸ்லாமியர்களைப் பற்றி எழுத இஸ்லாமியர்கள் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முதற்தர
ஆதாரங்கள் மிகவும் குறைவாகக் காணப்பட்டதென்பதே. பொதுப்படப் பார்க்குமிடத்து
அக்கால யாழ்ப்பாண அரசுகால பொருளாதார நடவடிக்கைகளில் இஸ்லாமியர்களின்
பங்கானது குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அமைந்திருந்ததெனலாம். இன்னும்
சொல்லப்போனால் அக்கால யாழ்ப்பாணப் பொருளாதாரத்தின் தூண்களாகவும்
இவர்களைக் கொள்ளலாம்.