dc.description.abstract |
நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட அல்லது தவிர்ந்து கொண்ட முழுமையான உடலியல், உளவியல், சமூக நல்வாழ்வினுடைய நிலையே சுகாதாரம் ஆகும். இலங்கையைப் பொறுத்தவரையில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளிலேயே சுகாதார நலக் கொள்கைகளை அரசாங்கமானது செயற்படுத்தத் தொடங்கி 1945களில் விரிவுபடுத்தியுள்ளது. அக்காலத்திலிருந்தே பெருமளவிலான நிதியினை வருடாந்தம் நாட்டின் பொதுச் சுகாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கி வருகின்றது. இலவச சுகாதார சேவைகள், அதிகரித்த ஆயுள் எதிர்பார்க்கை, குறைந்த சிசுமரண வீதம் என்பன தென்னாசியாவிலேயே சமூக சுகாதார அபிவிருத்தியில் இலங்கை முதலிடத்தைப் பெற காரணமாகியது. அனைத்து நாடுகளைப் போன்றே இலங்கையினதும் சுகாதார நல சேவைகளும் பொது மற்றும் தனியார் துறையின் கலவையாகும். 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இங்கு தனியார் சுகாதார நிறுவனங்களின் ஊடுருவல் ஆரம்பமாகியது. இருப்பினும் இன்று நாட்டின் பல பாகங்களிலும் அதன் சேவையானது விஸ்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இலவசமான சேவையினை பொதுச் சுகாதார நல சேவை நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கினாலும்கூட மக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு ஏன்? தனியார் நிறுவனங்களையே நாடிச் செல்கின்றனர் என்பது இவ்வாய்வின் பிரச்சினையாகும். நிந்தவூர்ப் பிரதேச மக்களின் சுகாதார நல சேவைகளை பெற்றுக் கொள்ளும் செயற்பாடு எவ்வாறுள்ளது என்பதை கண்டறிவதையும், அச்செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளைக் கண்டறிதலையும் நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள பொது மற்றும் தனியார் சுகாதார சேவை நிறுவனங்களை ஒப்பீட்டு அடையாளப்படுத்துவதை இவ்வாய்வானது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வுக்கான தரவுகள் பண்புரீதியான முறை(Qualitative method), தொகை ரீதியான முறை (Quantitative method) மூலம் பெறப்பட்டுள்ளதோடு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலகங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவில் பிரதேச செயலக பதிவேடுகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் புள்ளி விபரங்கள் என்பவற்றினூடாகவும், இணையத்தலம் மற்றும் நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. முதலாம் நிலைத் தரவுகளில் வினாக்கொத்துகள் 50 எளிய எழுமாற்று மாதிரி நுட்ப முறையில் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நேர்காணல், அவதானம், இலக்குக் குழுவுடனான கலந்துரையாடல் போன்றவற்றில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பின்னனியில் கனனி மென்பொருள் மூலம் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக இவ்வாய்வில் 63%மானவர்கள் தனியார் சுகாதார நிறுவனங்களிலேயே ஆரோக்கியம் தேடுகின்றனர். இவர்களின் இந்நடத்தையில் தூரம், சுகாதார சேவையின் தரம், நம்பிக்கை, காத்திருப்பு நேரம், சேவைத் தகவல்கள், பால்நிலை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வி நிலை, வயது, சேவைக் கட்டணம், முன் அனுபவம், வைத்தியர்களின் நிபுணத்துவம் மற்றும் பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. |
en_US |