Abstract:
தெங்கு உற்பத்தியானது சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ளல், அன்னிய
செலாவணி உழைத்தல் மற்றும் வேலைவாயப்புக்களை உருவாக்குதல் போன்றவைக்கான பிரதானமானதொரு வளமாக
காணப்படுகின்றது. தெங்கு முக்கோண வலயத்தில்; தெங்கு உற்பத்தியும்; இவ்வுற்பத்தி சார்ந்த சுயதொழில்வாய்ப்புக்களும்
பெருமளவில் காணப்படுவதோடு அண்மைக் காலங்களில் சில காரணிகளால் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது.
அவ்வகையில், சுயதொழில்வாய்ப்பில் தெங்கு உற்பத்தியின் பங்களிப்பு குறித்து, மல்லவப்பிடிய பிரதேச செயலகத்தினை
மையப்படுத்தியதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. மல்லவப்பிடிய மக்களின் சுயதொழில்வாய்ப்பில் தெங்கு உற்பத்தியின்
பங்களிப்பு குறித்து அறிவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். தெங்கு உற்பத்தியினை மேற்கொள்ளும்
சுயதொழிலாளர்களின் வருமானம், சேமிப்பு மற்றும் உற்பத்திச் செலவு போன்றவற்றினைக் கண்டறிதல், தெங்கு
உற்பத்தியின் போதும் சந்தைப்படுத்தலின் போதும் சுயதொழிலாளர்கள் முன்னோக்கும் பிரச்சினைகளை கண்டறிதல்,
உற்பத்திக்கான நிறுவன ரீதியான உதவி நடவடிக்கைகளை கண்டறிதல் போன்றன இவ்வாய்வின் துணை நோக்கங்களாக
காணப்படுகின்றன. இவ்வாய்விற்காக முதலாம் நிலைத் தரவுகளானது மல்லவப்பிடிய பிரதேச செயலகத்தின் 5 கிராம
சேவக பிரிவுகள் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு எளிய எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம்
கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து மற்றும் கலந்துரையாடல் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. மல்லவப்பிடிய பிரதேச செயலக
பிரிவு பதிவுகள், விவசாய திணைக்கள குறிப்புக்கள், தெங்கு அபிவிருத்தி அதிகார சபை பதிவுகள் மற்றும் தெங்கு
ஆராய்ச்சி நிலைய பதிவுகள்; மூலம் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகளில்
பண்புசார் தரவுகள் விபரண அடிப்படையிலும் அளவுசார் தரவுகள் எளிய புள்ளிவிபரவியல் முறையிலும் Ms Excel எனும்
கணணி மென் பொருள் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் மல்லவப்பிடிய பிரதேச மக்கள்
சுயதொழில்வாய்ப்பின் மூலமான வருமானம், சேமிப்பு மற்றும் உற்பத்தியின் போது எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள்
போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளது. மல்லவப்பிடிய பிரதேச செயலக மக்களது சுயதொழில்வாய்ப்பில் தெங்கு உற்பத்தி
பங்களிப்பு செய்த போதிலும் சுயதொழிலாளர்கள் தெங்கு உற்பத்தியினை மேற்கொள்ளும் போதும் அதனை
சந்தைப்படுத்தும் போதும் ஒரு சில பிரச்சினைகளை முன்னோக்குவதோடு குறைவாகவே நிறுவன ரீதியிலான உதவிகளை
பெற்றுக்கொள்கின்றனர் என்பது இவ்வாய்வின் முடிவாகும். தெங்கு உற்பத்தியினை மேற்கொள்ளும்
சுயதொழிலாளர்களுக்கு தெங்கு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வுகளையும் பயிற்சிகளையும் நிறுவன உதவிகளையும்
வழங்குவதன் மூலம் உற்பத்தியினை அதிகரிப்பதோடு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளலாம்
என்பது இவ்வாய்வின் சிபாரிசாக காணப்படுகின்றது.