dc.description.abstract |
இலங்கையின் நாகரீக வரலாறானது தென்னிந்தியாவைப் போன்றே பெருங்கற்காலப் பண்பாட்டுவழி சமுதாயத்தின் மூலமே
இலங்கைத்தீவு முழுவதும் ஒரு நிலையான சமுதாயக் கட்டமைப்பையுடைய நாகரீக வரலாறு வளர்ச்சியடைந்ததாக
ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நெடுந்தீவானது யாழ்குடாநாட்டின் சப்ததீவுகளில் முக்கியத்தும்பெற்றதாகவும் வட
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த நிர்வாக, வர்த்தக மையமாகவும் தனது அமைவிட காரணிகளாலும்
பௌதீகச் செல்வாக்கினாலும் ஆதிகாலந்தொட்டு இன்றுவரை மக்கள் வாழ்ந்துவரும் தீவாகக் காணப்படுகிறது.
இதனால்தான் நெடுந்தீவானது நீண்டதீவு மட்டுமல்ல அதற்கொரு நீண்ட பாரம்பரிய வரலாற்றையும் கொண்டுள்ளது
என்பதனை அங்கு சிதைவுறும் நிலையில் காணப்படும் தொல்லியல் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. நெடுந்தீவைப்
பற்றி ஒழுங்காக ஆவணப்படுத்தப்பட்ட இலக்கியங்கள் அரிதாகவே காணப்படுகிறது. அவ்வாறே தொல்லியல் ஆய்வும்
இங்கு முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இலக்கியங்களை எழுதுபவர்களும் அங்கு மக்கள் மத்தியில்
காணப்படுகின்ற ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டே வரலாறு எழுத வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இதனால் ஒரு பாரம்பரிய வரலாற்றின் உண்மைத் தன்மை ஐரோப்பியராட்சி நெடுந்தீவில் ஏற்படும் வரை புகைபடர்ந்த
நிலையிலேயே காணப்படுகிறது. ஐரோப்பியர் ஆட்சி நெடுந்தீவில் இடம் பெற்று இற்றைக்கு 400 ஆண்டுகளைக்
கடந்துள்ள போதும் அவர்களால் அமைக்கப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் அழிவடைந்தாலும் ஐரோப்பியரது வரலாற்றை
தெட்டத்தெளிவாக வெளிச்சமூட்டுகின்றது. குறிப்பாக ஐரோப்பிய ஆட்சியாளர்களில் ஒல்லாந்தரது வரலாற்று நினைவுச்
சின்னங்களே அத்தீவெங்கும் பரந்து காணப்படுவதோடு பார்ப்பவர்களையும் கவர்வதாக உள்ளது. ஓல்லாந்தர்; காலத்தில்
நெடுந்தீவு பெற்ற முக்கியத்துவத்தினால் இத்தீவிற்கே உரிய சில மரபுரிமைச் சின்னங்களை கட்டமைத்துவிட்டு
சென்றாலும் அவை இன்றும் மக்களால் பேணப்பட்டே வருகின்றது. குறிப்பாக குதிரை, அவற்றுடன் தொடர்புடைய
குதிரைலாயம், மூலிகை மருத்துவக்கேணி, பெருக்குமரம், புறாக்கூடு, குவிந்தா வெளிச்சவீடு, வைத்தியசாலை,
படைவீரர்கள் மனை போன்றன குறிப்பிடத்தக்கதாகும். இம்மரபுரிமைச் சின்னங்கள் முழுமையாக ஒல்லாந்தரது
கலைப்பாணியையும் தொழிநுட்ப அறிவையும் பிரதிபலிப்பதாகவே உள்ளன. இன்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்
நெடுந்தீவிற்கு அதிகளவில் வருகைதர காரணம் ஒல்லாந்தரது மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடும் நோக்கிலேயாகும்.
இவர்களால் கொண்டுவரப்பட்ட குதிரைகள் இன்று நெடுந்தீவின் சொத்தாக மாறியுள்ளது. ஒல்லாந்தரது ஒருசில
மரபுரிமைச் சின்னங்கள் சுற்றுலாப் பயணிகளை வியப்பிற்குரியதாகவும், ரசித்துப்பார்க்கத் தூண்டுவதாகவும் உள்ளது.
குறிப்பாக புறாக்கூடு நெடுந்தீவில் மட்டும் அமைந்திருந்து ஆய்வாளர்களைப் பல்வேறு வகையிலும் சிந்திக்கத் தூண்டிய
வண்ணம் உள்ளது. ஐரோப்பியர் அதாவது ஒல்லாந்தர் மூலமே ஒரு ஆவணப்படுத்தப்பட்ட வெளிச்சமூட்டும் முழுமையான
வரலாறு நெடுந்தீவு தொடர்பாக ஏற்படுத்தியதை மேற்கூறிய சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே, ஒல்லாந்தர்கால
மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தி அவை தொடர்பாக ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இவ்வாய்விற்கு இலக்கிய, தொல்லியல் சான்றுகளையும் மக்களிடம் மெற்கொள்ளப்பட்ட நேர்காணல்களையும் ஆதாரமாக
பயன்படுத்தியுள்ளேன். |
en_US |