Abstract:
கன்னன்குடா கூத்துக்கலையின் வளர்ச்சியில் நீண்ட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்டதொரு கிராமமாகும்.
கன்னன்குடாவில் திறமைவாய்ந்த அண்ணாவிமார்;, கூத்தர்கள், கொப்பியாசிரியர்கள், பக்கப்பட்டுக் கலைஞர், மேஸ்திரிமார்
வாழ்ந்து வருகின்றனர். கூத்துடன் தொடர்புடைய இச்செயற்பாடுகள் அச்சமூக உறுப்பினரிடையே பாரம்பரியமாக
கையளிக்கப்பட்டு வருகின்றது. இக்கிராம மக்களின்; வாழ்வியல் வழக்காறுகள் கூத்தின் பயில்வை முன்னெடுப்பதற்கேற்ற
விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கிராமத்தில் கூத்தின் பயில்வு சிறப்பான முறையில்
முன்னெடுக்கப்படுகின்றது. இக்கிராமத்தின் கூத்து செயற்பாடு இப்பிரதேச கூத்துக்கலை வளர்ச்சியில் பெரும்
பங்காற்றுவதாகவும் உள்ளது. இவ்வாய்வு மட்டக்களப்பின் கூத்துக்கலை வளர்ச்சியில் கன்னன்குடா கிராமத்தின்
இடத்தினைத் மதிப்பிடல், கூத்துச் செயற்பாட்டில் கன்னன்குடா கிராமம் ஆற்றும் பங்களிப்பை அடையாளப்படுத்தல்,
கன்னன்குடாவின் கூத்துக்கலை வளர்சியில் செல்வாக்குச் செலுத்தும் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளை
அடையாளப்படுத்தல் என்பனவற்றை நோக்களாகக் கொண்டுள்ளது. இது ஒரு சமூகம் தொடர்பான ஆய்வாக
விளங்குவதால் விளக்கமுறையியல் (Exploratory method) இவ்வாய்வில் பின்பற்றப்படுகின்றது. பண்புசார் ஆய்வு
முறையியல் (Qualitative research design) எனும் ஆய்வு நுணுக்கம் பின்பற்றப்பட்டு பரிந்துரைகளும் முடிவுகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன. கன்னன்குடா கிராமத்தின் கூத்துச் செயற்பாடுகளின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி அதனை
முன்னுதாரணமாகக் கொண்டு மட்டக்களப்பின் கூத்துச் செயற்பாட்டை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளப்படும்
பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்க அல்லது கண்டறிய முயற்சித்தல் இவ்வாய்வின் பரிந்துரையாக அமையும். இது
மட்டக்களப்பின் பல்வேறு பிரதேசங்களிலும் வீழ்சியுற்றிருக்கும் கூத்துச் செயற்பாட்டை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கான
ஆலோசனையாக அமையும்.