Abstract:
இலங்கை ஒரு விவசாய நாடாக இருப்பதனால் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் விவசாயத்
துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு மானியத் திட்டங்களையும், நீர்ப்பாசனத் திட்டங்களையும், தந்திரோபாய
வழிவகைகள் மற்றும் கடன் உதவிகளையும் முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறான திட்டங்களுள் ஒன்றாகவே
உரமானியத்திட்டம் காணப்படுகின்றது. எனவே இவ்வாறு மானிய அடிப்படையில் வழங்கப்படுவதும், நெல் உற்பத்திக்கான
உள்ளீடுகளில் ஒன்றானதுமான உரம் அதன் பாவனையின் அளவிற்கேற்ப நெல் உற்பத்தியில் ஏற்படுத்தும்
தாக்கத்தை மதிப்பீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆய்விற்காக, ஏறாவூர்ப்பற்று
பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை, ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய கமநலகேந்திர
நிலையங்களிற்குட்பட்ட வகையில் 2015 ஆம் ஆண்டு சிறுபோக நெற்பயிர்ச்செய்கைக்காக உரமானியத்தை பெற்று, 2015
சிறுபோக நெற்பயிர்ச்செய்கையை மேற்கொண்ட 2,066 விவசாயிகளிலிருந்து 104 விவாயிகள் எழுமாற்று மாதிரி
அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நெல் உற்பத்தியை சார்ந்த மாறியாகவும், உரப்பாவனையின்
அளவு, விதை நெல்லின் அளவு, விவசாயிகளின் கல்வி நிலை, விவசாயிகளின் விவசாய அனுபவம்,
வாடகைக்கு அமர்த்தும் ஊழியத்திற்கான செலவு மற்றும் இயந்திரப்பாவனைக்கான செலவு என்பவற்றை
சாரா மாறிகளாகவும் கொண்டு, கொப் - டக்ளஸ் உற்பத்தி தொழிற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட
பல்மாறிப்பிற்செலவு ஆய்வு முறையின் ஊடாக தரவுப்பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின்படி,
உரப்பாவனையின் அளவு நெல் உற்பத்தியுடன் நேர்க்கணிய பொருண்மைமட்டத்தை கொண்டுள்ளது. ஆய்விற்காக
எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனைய சாராமாறிகளான விதை நெல்லின் அளவு நெல் உற்பத்தியுடன் ஒரு சதவீத
பொருண்மை மட்டத்தில் நேர்க்கணிய தொடர்பினையும், விவசாயிகளின் கல்வி நிலை 5 சதவீத பொருண்மை
மட்டத்தில் நெல் உற்பத்தியுடன் நேர்க்கணிய தொடர்பினையும், விவசாயிகளின் விவசாய அனுபவம் நெல் உற்பத்தியுடன்
10 சதவீத பொருண்மை மட்டத்தில் நேர்க்கணிய உறவையும் வெளிப்படுத்தி நிற்கும் அதேவேளை
இயந்திரப்பாவனைக்கான செலவு 10 சதவீத பொருண்மை மட்டத்தில் நெல் உற்பத்தியுடன் நேர்க்கணிய தொடர்பை
கொண்டுள்ளமையையும் பல்மாறிப் பிற்செலவாய்வு முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. எனினும் ஆய்விற்காக
எடுத்துக்கொள்ளப்பட்ட சாரா மாறியான வாடகைக்கு அமர்த்தும் ஊழியத்திற்கான செலவு மாத்திரம் நெல்
உற்பத்தியுடன் பொருண்மைத் தன்மையற்றதாகக் காணப்படுகின்றது. அத்துடன் கு பெறுமதி புள்ளிவிபர ரீதியாக
பொருண்மைத்தன்மையுடையதாக காணப்படுகின்றது. எனவே இங்கு மேற்கொள்ளப்பட்ட பல்மாறிப்பிற்செலவு ஆய்வு
முறையில் முழு மொத்த மாதிரியும் புள்ளிவிபர ரீதியாக பொருண்மைத்தன்மையுடையதாக காணப்படுவதால்
ஆய்வு முடிவுகளை ஏற்கக்கூடிய தாகவுள்ளது.