dc.description.abstract |
இலங்கையில் நடைபெற்று வருகின்ற இனப்பிரச்சினையில் அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினையில்
ஈடுபாடு காட்டிய தமிழக முதல்வர்களில் எம்.ஜி.ஆருக்கும் அவரைத் தொடர்ந்து சிலகால இடைவெளியில்
அப்பதவியினை அலங்கரித்த ஜெயலலிதாவிற்கும் தனியிடமுண்டு. இவர்கள் இருவருமே அ.தி.மு.க என்ற
கட்சியினைச் சேர்ந்தவர்கள். முன்னர் பின்னவருக்கு அரசியல் குருவாகவும் இருந்தவர். பின்னவர்
முன்னவரை தன்னை அவரது அரசியல் வாரிசாகவும் கூறிக்கொண்டவர். இருப்பினும் இலங்கையினது
இனப்பிரச்சினை தொடர்பாக இவர்கள் இருவரும் பின்பற்றிய கொள்கைகளுக்குமிடையிலே வேறுபாடுகள்
காணப்பட்டன. எம்.ஜி.ஆரினைப் பொறுத்து அவர் இலங்கையில் இடம்பெற்று வந்த இனப்பிரச்சினை
தொடர்பாக நிலையான கொள்கையினை இறக்கும்வரை பின்பற்றி வந்தவர். அதாவது, இலங்கைத்
தமிழர்கள் பற்றியும் இலங்கையில் நடைபெற்று வந்த போராட்டத்திற்கு ஆதரவான கொள்கையினையும்
உடையவராகவே இருந்து வந்தவர். ஆனால், ஜெயலலிதாவோ இவ்விடயமாக இரு வகையான
கொள்கையினைக் கடைப்பிடிப்பவராகக் காணப்பட்டார். அவ்வகையில், 2009இற்கு முன்னதாக அதாவது,
சிவில் யுத்தகாலத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கையின் இனப்பிரச்சினை பொறுத்தும் இங்கு
வாழ்ந்த தமிழர்கள் பொறுத்தும் அவர் அக்கறை கொள்ளாத ஒருவராகவே இருந்துள்ளார். அதேநேரத்தில்
சிவில் யுத்தம் முடிவடைந்தமையின் பின்னராக இலங்கைத் தமிழர்கள்மீது அனுதாபம் கொண்டவராகவும்
தனிநாட்டுக் கோரிக்கையினை ஆதரிப்பவராகவும் தனது கொள்கையினை அப்படியே மாற்றியிருந்தார்.
இவ்வாய்வானது வரலாற்றுத்துறை சார்ந்து காணப்படுவதுடன் பரந்துபட்டதாகவும் உள்ளது. மேலும்
விவரண மற்றும் ஒப்பியலின் அடிப்படையில் அமைந்த ஆய்வாக அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்விற்குத்
தேவைப்பட்ட தரவுகள் பெருமளவிற்குப் பண்பு ரீதியானவையாக உள்ளன. நேர்காணல்கள்,
அவதானிப்புக்கள், கலந்துரையாடல் போன்ற முதல்நிலைத் தரவுகளும் நூல்கள், சஞ்சிகைகள்,
பத்திரிகைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றவை இரண்டாம் நிலைத் தரவுகளாகவும்
ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் எம்.ஜி.ஆர் பின்பற்றிய கொள்கை,
இவ்விடயமாக ஜெயலலிதா கைக்கொண்ட கொள்கை, இவ்விடயமாக இருவருக்குமிடையிலான கொள்கை
வேறுபாடுகள், அவை ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவற்றினை வெளிக்கொண்டுவருவது ஆய்வினது
நோக்கங்களாகக் காணப்படுகின்றன. முன்னைய ஆய்வுகள் என்று சொல்லுமளவிற்கு இவ்விடயமாக
எவ்விதமான ஆய்வுகளும் நேரடியாக மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்
ஒரு சிலர் அண்மைக்காலங்களில் வெளிவந்த உள்ளுர் பத்திரிகைகள் சிலவற்றில் மேற்குறித்த
விடயமாகச் சில கட்டுரைகளை ஆய்வாளர்கள் சிலர் எழுதியிருந்தமை குறிப்பித்தக்கது. எது
எவ்வாறாயினும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இருவரும் எடுத்த நடவடிக்கைகள்
இலங்கைத் தமிழ் மக்களிடையிலே செல்வாக்கினைப் பெற்றிருந்தாலும்கூட எம்.ஜி.ஆர் இவ்விடயமாக
மேற்கொண்ட நடவடிக்கைகளினால் இலங்கைத் தமிழரிடையே பெற்ற மதிப்பினை ஜெயலலிதாவினால்
பெற முடியவில்லை என்பதே உண்மை. |
en_US |