Abstract:
கலைகளில் அழகியற் கலை முக்கியமானதாகும். அதில் வரைதல் பிரதான ஒரு கலையாகத் திகழ்கிறது.
இக்கலையானது மாணவர்களிடையே இயற்கையாகவே காணப்படக்கூடிய ஒன்றாகவும் சில போது பயிற்சியின் மூலம்
வளர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு கலையாகவும் காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இவ்வாய்வானது இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீட மாணவர்களின் வரைதல் தொடர்பான ஈடுபாடு
மற்றும் அதனை வெளிப்படுதுவதற்கான களம் என்பன பற்றி ஆராயும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்விற்காக வேண்டி பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட பீடத்தின் சில மாணவர்களிடம் மற்றும்
விரிவுரையாளர்களிடம் பெறப்பட்ட நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் என்பன முதலாம் நிலைத் தரவுகளாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வாய்வுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில்
குறித்த பீடத்தின் 100 மாணவர்களை எழுமாறாகத் தெரிவு செய்து அவர்களிடம் வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு
தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெறப்பட்ட தரவுகளின் படி இங்கு கற்கின்ற மாணவர்களில் 71%
ஆனோர் வரைதலில் ஆர்வம் காட்டக்கூடியவர்களாகவும், 5% ஆனோர் நடுநிலையானவர்களாகவும் 24% ஆனோர்
ஆர்வமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இதன்படி இங்குள்ள மாணவர்களில் அதிகமானோர் வரைதல் துறையில்
ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தெளிவாகின்றது. அதேவேளை, பல்கலைக்கழகத்தில் அவர்களின் திறமையினை
வெளிக்காட்ட சந்தர்ப்பம்; கிடைக்கின்றதா என்ற கேள்விக்கு அனைவரினதும் பதில் முழுமையாக “இல்லை”
என்பதாகவே அமைந்திருந்தது. எனவே இவ்வாய்வின்படி இங்குள்ள மாணவர்களில் பெரும்பான்மையானோர்
வரைதலில் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருக்கின்ற போதும் அவர்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான
களம் காணப்படுவதில்லை என்பது தெளிவாகின்றது. மேலும் மாணவர்கள் வரைதல் கலை மூலம் எதிர்பார்க்கும்
நன்மைகள் மற்றும் வரைதல் கலையை தமது பீடத்தில் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் கருத்துக்களாக
முன்வைத்துள்ளனர். எனவே இவ்வாலோசனைகளினை நடைமுறைப்படுத்துவதனூடாக இப்பீடத்தில் கலையை மேலும்
வளர்க்க முடியும்.