Abstract:
தென்னிலங்கை திக்குவல்லையைச் சேர்ந்த முகம்மது கமால் எனும் இயற்பெயருடைய திக்குவல்லை கமால்
பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ளார். பொதுவாக மனித உணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்ற
விடயம் சிறுகதைகளில்தான் சாத்தியமாகும். சமுதாய அக்கறை கொண்ட பல எழுத்தாளர்களும் தம் சமூகம் சார்ந்த
அவலங்களை சிறுகதைகளினூடாகவே பெரிதும் வெளிக்காட்டுவர். அந்தவகையில், தான் வாழ்கின்ற சமூகத்தின் மீது
மிக்க அக்கறை கொண்ட திக்குவல்லை கமாலின் சிறுகதைகள் அவரது சமூக யதார்த்தங்களை
வெளிப்படுத்துகின்றன. சிறுகதையாளர்கள் பலரும் பல்வேறு பரிமாணங்களில் சிறுகதைகள் எழுதுகின்ற போதிலும்
அவரவர் பிரதேச மக்களின் பிரச்சினைகளை சிறுகதைகளினூடாக வெளிக்கொண்டுவருவதென்பது அரிதான ஒரு
விடயமாகும். முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள திக்குவல்லை கமாலின் அத்துணை கதைகளிலும்
தென்னிலங்கை கிராம முஸ்லிம் சமூக பிரச்சினைகள் சித்திரிக்கப்படுகின்றன. அவற்றினை ஆராய்வதாகவே
இவ்வாய்வு அமைகின்றது. திக்குவல்லை கமாலின் சிறுகதைகளில் தென்னிலங்கை முஸ்லிம் சமூக பிரச்சினைகள்
எவ்வாறு வெளிக்காட்டப்படுகின்றன என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். அவ்வாறான
பிரச்சினைகளுக்கெதிராக எவ்வாறு குரல் கொடுக்க வேண்டும் என்ற ஆசிரியரின் வேட்கையைப் புரியவைப்பதும்
அத்தோடு, தென்னிலங்கை முஸ்லிம் சமூக தனித்துவமான பண்புகளை அடையாளப்படுத்துவதையும்
துணைநோக்கங்களாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு திக்குவல்லை கமாலின் ஒன்பது சிறுகதைத் தொகுதிகளையும்
அவருடனான நேர்காணலையும் முதலாம் நிலைத் தரவாகவும் அவரது சிறுகதைகள் தொடர்பாக வெளிவந்த
முன்னைய ஆய்வுகள், கட்டுரைகள், விமர்சனங்கள், முன்னுரைகள் என்பன இரண்டாம் நிலைத்தரவுகளாகவும்
கொண்டுள்ளன. தென்னிலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதிலும் அம்மக்களின்
தனித்துவமான சில பண்புகளை அடையாளப்படுத்துவதிலும் திக்குவல்லை கமாலின் சிறுகதைகளுக்கு கணதியான
இடமுண்டு என்பது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.