Abstract:
சிந்தனையின் வெளிப்பாடாக அமையும் மொழி பதங்களை உள்ளடக்கிய எடுப்புக்களாலானது. இந்த மொழியியின்
கட்டமைப்பைப் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்தியவர் சுவிசர்லாந்து நாட்டின்
தலைநகரான ஜெனிவாவில் 1857இல் பிறந்த பேடிணன் டீ. சசூராவார். மனிதன் மட்டுமல்ல ஏனைய அஃறிணைப்
பொருட்களில் அடங்கும் தாவரங்கள், விலங்குகள் கூட மொழியினைப் பயன்படுத்துகின்றவாயினும் மனிதர்களின்
மொழி தனித்தன்மை வாய்ந்தது. பொதுவாக மொழியினைப் பேச்சு மொழி, எழுத்து மொழி என இரண்டாகப்
பிரித்தாலும் ஒரு மொழியைப் பேசுகின்றவர்கள் தமக்கேயுரிய தனித் தன்மைகளைப் பேச்சில் பதிக்கின்றார்கள்.
இதனால், மனிதர்கள் மொழியில் புதிய சொற்சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றார்கள். பழையன கழிந்து புதியன
புகுகின்றது. இவையெல்லாம் பேச்சில் நிகழ்கின்றன. இவை அனைத்தையும் மொழியியலில் ஆய்வு செய்ய முடியாது
எனக் கருதிய சசூர் மொழியியலின் ஆய்வு விடயமாக மொழியினை கரிசனையோடு வரையறுக்க முற்படுகின்றார்.
இந்த மொழியின் கட்டமைப்புக்குள் இருக்கும் முறைமை என்பது புதியதுமல்ல உருவாக்கப்பட்டதுமல்ல. அது ஏலவே
உள்ளதும் அனைத்து மொழிகளுக்கும் பொதுமையானதுமாகும். இந்தக் கட்டமைப்பினை மனித மனம் அனுபவத்தின்
துணையின்றி அறிந்து கொள்கிறது. நாம் எழுதுகின்ற வாக்கியங்களை சரியான ஒழுங்கில் இட்டு அல்லது
வார்த்தைகளை சரியான ஒழுங்கில் உச்சரித்து இலக்கண விதிகளுக்கேற்ப அர்த்தமுள்ள வசனமாக மாற்றுவது
இம்மொழிக் கட்டமைப்பேதான். வார்த்தையின் அர்த்தமானது மொழி முறைமைக்குள்ளும் குறியீடுகளுக்குமிடையே
இருக்கின்ற வேறுபாட்டில் தங்கியுள்ளது. இம்மொழி முறைமையினை நாம் வடிவ அளவையியலோடு தொடர்புபடுத்த
முடியும். சசூர் பேசும் இம்மொழிக்கட்டமைப்பானது வடிவ அளவையியலில் பேசப்படுகின்ற பதங்கள், எடுப்புக்கள்,
அனுமானங்கள், நியமமில் போலிகள் முதலானவற்றை விளக்கக்கூடிய ஆற்றலுடையது. சசூரின் மொழிக்
கட்டமைப்பையும் அதனுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கின்ற பதங்கள், எடுப்புக்களை உள்ளடக்கிய வடிவ
அளவையியலையும்; ஒப்பிட்டு ஆராய இக்கட்டுரை முனைகிறது. பகுப்பாய்வு முறையியல், ஒப்பிட்டு முறையியல்,
விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வானது இரண்டாம் நிலைத்
தரவுகளைத் தாங்கியது.