Abstract:
நாகதீபப் பண்பாட்டு அடித்தளத்திலிருந்து கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மலர்ந்திருந்த யாழ்ப்பாண அரசானது
மத்தியகால இலங்கை வரலாற்றில் சுதந்திர அரசாக விளங்கியிருந்தது. இவ்வரசு யாழ்ப்பாணப் பகுதியை
மையப்படுத்தியவகையில் தோற்றம்பெற்றிருந்ததனால் யாழ்ப்பாண அரசு என்ற பெயரைப் பெற்றிருந்ததுடன் இது
யாழ்ப்பாணப் பட்டணம் அதனைச் சுற்றியிருந்த தீவுகள், வன்னியின் சில பகுதிகள், மன்னார், திருகோணமலை ஆகிய
பகுதிகளை உள்ளடக்கியவகையில் யாழ்ப்பாண இராச்சியம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. இவ்வாறு விளங்கியிருந்த
யாழ்ப்பாண அரசானது 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீழ்ச்சியடையும்வரை அரசியல், பொருளாதார, சமூக
பண்பாட்டு நிலைகளில் எழுச்சிமிக்க அரசாக விளங்கியிருந்தது. இவ்வாறு, தோற்றம் பெற்றது முதல் வீழ்ச்சியடையும்
வரை யாழ்ப்பாண அரசு எழுச்சிமிக்க அரசாக விளங்கியதற்கு மூலகாரணம் ஆட்சியாளர்களது சிறந்த அரசியல்
நடவடிக்கைகளும், அதற்கு உறுதுணையாக இருந்த பொருளாதார வளங்களும் அதனைச் சிறப்பானவகையில்
முன்னெடுத்துச் செல்வதற்காக ஆட்சியாளர்கள் வகுத்திருந்த சிறந்த பொருளாதாரக் கொள்கைகளும் ஆகும்.
இப்பொருளாதாரக் கொள்கைகள் யாழ்ப்பாண அரசிற்குப் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொடுத்து யாழ்ப்பாண
அரசு பொருளாதார ரீதியில் எழுச்சிமிக்க அரசாக விளங்குவதற்கு வழியமைத்திருந்தது. இவ்வாறு, யாழ்ப்பாண
அரசர்கள் பின்பற்றிவந்த பொருளாதாரக் கொள்கைகளில் அரசிற்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் பல்வேறு
வரிகளை நடைமுறைப்படுத்தி அதனை அறவிடுவதற்கென பல அதிகாரிகளை நியமித்து அவற்றைப் பெற்றுவந்தனர்.
இவ்வாறான வருமானங்களால் யாழ்ப்பாண அரசிற்கு வருமானம் கிடைத்துவந்த அதேவேளை யாழ்ப்பாண அரசு
பணப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு என்ற சிறப்பைப் பெற்றிருந்தது. யாழ்ப்பாண அரசிற்கு வரி
மூலமான வருமானங்கள் தவிர இராச்சியத்தில் காணப்பட்ட இயற்கை வளங்களை அடிப்படையாகக்கொண்டு,
முன்னெடுக்கப்பட்டுவந்த பல்வேறு தொழில்கள் மூலமாகவும் வருமானங்கள் கிடைத்துவந்தாலும் இவ்வரசு சுதந்திர
அரசு என்பதற்கேற்ப தனக்கென தனித்துவமான வருமான மூலங்களாக பல வரிகளை நடைமுறைப்படுத்தி அறவிட்டு
வந்தமையானது இடைக்கால இலங்கை வரலாற்றில் அதன் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றது.