Abstract:
சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனம். திரைப்படக் கலையின் அளப்பெரிய ஆற்றல்களினால்
வரலாறுகளையும், அறிவியல் உண்மைகளையும் காட்சி வடிவில் எளிதாகக் காண்பிக்க முடியும். திரைப்படம் என்பதில்
அதன் கதை, திரைக்கதை வசனம், என்பதற்கும் அப்பால் கதாநாயகனின் தேர்வும் மிகவும் அவசியமான ஒன்று.
அந்தவகையில் இயக்குனர் சங்கரின் திரைப்படங்களின் வெற்றியின் பின்னணியில் கதாநாயகன் எத்தகைய
தாக்கத்தைச் செலுத்துகின்றான் என்பது இந்த ஆய்வின் மூலம் ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் எல்லையாக
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 12 தமிழ்த் திரைப்படங்கள் அமைகின்றன. இந்த ஆய்வில்
இயக்குனர் சங்கர் தெரிவு செய்யும் கதாநாயகர்களுக்கு இடையிலான ஒப்புமை, தனித்துவம் போன்றவற்றினையும்,
சங்கர் தமது கதாநாயகர் தெரிவில் மற்றைய இயக்குனர்களை விட எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதினையும்
கண்டறிவது இவ் ஆய்வின் நோக்கமாக அமைந்திருந்தது. இயக்குனர் சங்கரின் திரைப்படங்களில் கதாநாயகர்கள்
அவர்களின் தனித்திறமைக்கு ஏற்ற முறையிலே பல்வேறு கோணங்களில் அவரது படைப்புக்களில்
பயன்படுத்தப்படுகிறார்கள். மேலும் திரைப்படத்தின் வெற்றியிலே திரைக்கதைக்கு ஏற்ற கதாநாயகன் தேர்வு
முக்கியமான வகிபாகமாக அமைகின்றது என்பதே இந்த ஆய்வின் கருதுகோள்களாகும். இந்த ஆய்வின் மூலங்களாக
இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படங்கள் அமைகின்றன. இந்த ஆய்வானது ஒப்பீட்டாய்வு, பகுப்பாய்வு மற்றும்
விபரண ஆய்வு போன்ற ஆய்வு முறையியல்களைக் கைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு
கதாநாயகனுக்கும் இடையிலான ஒப்புமை, தனித்துவம் போன்றவற்றினை கண்டறிவதற்கு ஒப்பீட்டாய்வு முறையும்,
இயக்குனர் சங்கரின் திரைப்படங்களுக்கும் அவரின் கதாநாயகர்களுக்கும் இடையிலான தொடர்பையும் அவர்களின்
வகிபாகத்தினையும் கண்டறிய பகுப்பாய்வு முறையியலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் ஊடாக
இயக்குனர் சங்கரின் கதாநாயகர்கள் சாதாரண குடிமகனாகக் காட்டப்பட்டாலும், அசாதாரண இயல்புகளைக்
கொண்டவர்களாகவும், தானே தனித்து நின்று அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பவர்களாகவும்
சித்திரிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த ஆய்வினூடாகக் கண்டறியப்பட்டுள்ளது.