Abstract:
மெய்யியலின் பிரதான வகையான இந்திய மெய்யியல் “தரிசனம்” என அழைக்கப்படுகின்றது. தரிசனம் என்பது காட்சி
எனவும், உள்ளுணர்வால் புரிந்து கொள்ளப்படும் சிந்தனை எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. இவ் இந்திய
தரிசனங்களுக்கெல்லாம் அடிப்படையாகவும், முதலில் தோற்றம் பெற்ற காலப்பகுதியாகவும் அமையப்பெறுவது
வேதகாலம் ஆகும். இது சிந்துவெளிக்காலத்தை அடுத்து ஏறத்தாழ கி.மு 1500ஆம் ஆண்டளவில் நிலவியதென்பது
ஆய்வாளர் பலரும் பொதுவாக ஏற்றுக்கொண்ட கருத்தாகும். அதன் இறுதிப்பகுதியாக கருப் பெற்றதே
உபநிடதங்களாகும். உபநிடதங்கள் வேதாங்கம், வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு
உபநிடதங்கள் வேதாங்கம் என்று பெயர் பெறுவதற்குக் காரணம் அவை வேதத்தின் முடிந்த முடிவாகவும், வேதத்தின்
உட்பொருளை விளக்குவதாகவும், வேதத்தின் சாராம்சமாகவும் விளங்குகின்றமையே ஆகும். அதே போன்று
உபநிடதங்கள் வேதங்களின் இறுதியாகப் போதிக்கப்பட்டமையால் வேதாந்தம் (வேத + அந்தம்) என்ற பெயரைப்
பெறுகின்றன. இதிலிருந்து வேதங்களிற்கும் உபநிடதங்களுக்குமிடையிலுள்ள தொடர்பு நன்கு பெறப்படுகின்றது. அச்
சிந்தனைகளில் ஒழுக்கம் என்ற விடயம் மிகவும் முக்கியமானதாகும். இது வாழும் முறை அல்லது வாழ்க்கை நெறி
எனப்படும். இவ் ஒழுக்கம் பற்றிய மிகச் சிறப்பான சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை உபநிடதங்களில் காணலாம்.
இவ் ஆய்வானது உபநிடதங்களில் வலியுறுத்தப்படும் ஒழுக்கவியல் சிந்தனைகளை மெய்யியல் ரீதியாக
தெளிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேதத்தின் கிரியை மரபுகளின் கருத்தின்மையை வலியுறுத்தி
தோன்றிய உபநிடதங்கள் எவ்வாறான அடிப்படையில் தத்துவத்துடன் ஒழுக்கவியல் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன
என்பது முக்கியமான ஆய்வுப் பிரச்சினையாகும். மேலும் இவ் ஆய்வானது முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கைகள்,
சஞ்சிகைகள், நூல்கள் போன்ற இரண்டாம் தர மூலங்களுடன், விபரணவியல், ஒப்பீட்டு முறை போன்ற ஆய்வு
முறையியல்களைப் பயன்படுத்துகின்றது.