Abstract:
இரா.நடராசன் ஒரு சிறுவர் இலக்கிய எழுத்தாளர். இவரின் ஆயிஷா எனும் சிறுகதை பல சமூக கருத்துக்களை
புனைவாக்கிய ஒரு படைப்பாகும். ஆயிஷா இன்று பள்ளிக்கூடங்களில் இடம்பெறும் சீர்கேடுகளையும், கல்வி முறையில்
உள்ள குறைபாடுகளையும் வெளிக்கொணரும் ஒரு சிறுகதையாக அமையப்பெற்றுள்ளது. மாணவர்- ஆசிரியர் உறவு
எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதனையும் ஒரு மாணவரின் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் ஆசிரியரின் பங்களிப்பு
எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை விளக்கும் ஒரு சமூகவியல் கதையாகவும் காணப்படுகின்றது.
நடைமுறையில் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களினால் இடம் பெறுகின்ற சீர்கேடுகளை யதார்த்தபூர்வமாகவும்
உணர்வுபூர்வமாக எளிய நடையில், எள்ளல் பாணியுடன் புனையப்பட்டுள்ளது. மனதை உருகச் செய்யும் சொல்லாடல்கள்
பயன்படுத்தப்பட்டு இன்றைய கல்வி முறைமை, ஆசிரியர் செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என்பதோடு பெண்கள்
கல்வி பெறுவது அவசியம் எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இக்கதையில் எள்ளலூடாக தற்கால கல்விமுறை பற்றிய
விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இன்று பாடசாலைகள் பணம் சம்பாதிக்கும் வர்த்தக தளங்களாக,
மனிதாபமானமற்ற நிறுவனங்களாக மாறி வரும் நிலை உணர்த்தப்பட்டுள்ளது. இவ்வகையில் சமூக நலக்கருத்துக்களை
உள்ளடக்கிய சிறுகதை எனும் வகையில் ஆயிஷா கவனத்திற்குரியதாகவும் விரிவான ஆய்விற்குரியதாகவும்
அமைந்துள்ளது.