Abstract:
ஆய்வுப் பிரதேசத்தில் அவதானிக்கக்கூடிய வேறுபட்ட மானிட நடவடிக்கைகளை இனங்காணுதலும் இம்மானிட
நடவடிக்கைகளினாலான கரையோர சுற்றாடலுக்கான அச்சுறுத்தல்களை வெளிரீதியாக இனங்காணுதலும் என்பதனை
பிரதான நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வுக்கான தரவுகள் 2016 மார்ச் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பிரிவில்
சேகரிக்கப்பட்டன. வெலிகம பிரதேச செயலாளர் பிரிவினுள் உள்ளடங்குகின்ற கரையோரப்பிரதேசத்தை முழுமையாக
உள்ளடக்கியதாக சுமார் 15KM நீளத்தை உள்ளடக்கிக் காணப்படுகின்ற பிரதேசத்தினுள் நடப்பதனூடாக தரவுகள்
சேகரிக்கப்பட்டன. இங்கு சுமார் 2KM இடைவெளியினுள் தெரிவு செய்யப்பட்ட 8 மாதிரித்துண்டங்களில் (துண்டங்கள் AH) தேவையான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர நோக்கத்துடன் கூடிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 30
தகவல் தருனர்களிடமிருந்து வினாக்கொத்துக்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இதற்கு மேலதிகமாக தேவையான அனுபவப்
பகிர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 30 நிமிடங்கள் வரையில் 5 பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடல்
மேற்கொள்ளப்பட்டது. இந்தஅடிப்படையில் வெலிகம கரையோரப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட பிரதான மானிட
நடவடிக்கைகளாக முருகைக் கல் அகழ்வு, மணலகழ்வு, மீன்படி, சுற்றுலாத்துறை, முகாமைக் கட்டுமானங்கள் மற்றும்
உட்கட்டமைப்பு விருத்தி போன்றன இனங்காணப்பட்டன. மேலும் இம்மானிட நடவடிக்கைகளானவை வெளிரீதியான
வாய்ப்புத் தன்மைகளுக்கேற்ப வேறுபட்ட பாங்கில் குறித்த பிரதேசத்தில் பரம்பிக் காணப்படுகின்றன. அத்தோடு மிகச்
செறிவாக மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை என்பன காணப்படுவதோடு, பிரதேசம் சார்ந்து இடம்பெற்று வருகின்ற
முருகைக்கல் அகழ்வு மற்றும் மணலகழ்வு போன்றன மிக இறுக்கமான முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக
குறைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு குறித்த கரையோரம் சார்ந்து இனங்காணப்பட்ட சுற்றாடலுக்கான
அழுத்தங்களில் நில மாசாக்கம், நீர் சார் மாசாக்கம், கரையோர தாவர விலங்குகளின் அழிவும் தரமிழப்பும் மற்றும்
கரையோர தின்னல் போன்றன இனங்காணப்பட்டன. குறிப்பாக கரையோரப் பிரதேசத்தில் நேரடியாகவும் கால்வாய்கள்
ஊடாகவும் வேறுபட்ட திண்ம மற்றும் திரவ வடிவக் கழிவுகள் குறித்த கரையில் சேர்க்கப்படுகின்றன. இக்கழிவுகளுக்கான
மூலங்களாக சுற்றுலாப் பிரயாண ஹோட்டல்கள் மற்றும் ஓய்வறைகள், நகர மையங்கள், துறைமுகம், மீன்களை
இறக்கும் தளங்கள், கட்டிடக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் போன்றன விளங்குகின்றன. இதன்படி கரையோர
மாசாக்கத்துக்கும் மானிட நடவடிக்கைகளுக்கும் மிடையே நேர்த்தொடர்பு காணப்படுகின்றது எனலாம். அத்தோடு தாவர
விலங்குகளின் அழிவும் குறித்த பிரதேசம் சார்ந்து உயர்வாகக் காணப்படுவதோடு, குறிப்பாக வேறுபட்ட
கட்டுமானங்களுக்காக இத்தாவரங்கள் பெரிதும் அழிக்கப்படுகின்றன. எனவே, மானிட நடவடிக்கைகளுக்கும் தாவரங்களின்
பரம்பலுக்குமிடையே எதிர்மறைத் தொடர்பொன்று காணப்படுகின்றது. மேலும் வேறுபட்ட கடல் வாழ் உயிரிகள்
கடலுணவுக்காக நுகரப்படுவதோடு, குறிப்பிட்டளவு கரையோர தின்னல் செயற்பாடுகளும் குறித்த பிரதேசத்தில்
இனங்காணப்பட்டுள்ளது.