dc.description.abstract |
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் 2000 ஆம் ஆண்டு அகால
மரணமடைந்தபோது பல முஸ்லிம் கிராமியப் புலவர்கள் குறிப்பாக வயதான பெண்கள் தமது வேதனைகளைக் கிராமியக்
கவி வடிவத்திலே பாடியிருக்கின்றனர். இத்தகைய கவிகளில் றஹ்மத்தும்மாவால் பாடப்பட்ட ‘அஷ்ரப் ஒப்பாரி’ என்ற
கவித்தொகுதி முக்கியமானது. இத்தொகுதியில் நூற்றுக்கும் மேலான கவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கவிகள் ஒரு
பெண்ணின் இயல்பான வேதனைகளின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளமை முக்கிய அம்சமாகும். அந்தவகையில்,
இக்கவிகள் றஹ்மத்தும்மாவின் பாவனையற்ற வேதனைகளை, உள்ளக் குமுறல்களை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன
என்பது பற்றியும் அவை ஒப்பாரியின் பல்வேறு பண்புகளுடனும் எவ்வாறு அமைந்துள்ளன என்பது பற்றியும் எடுத்துக்
காட்டுவது இந்த ஆய்வின் நோக்கமாக அமைகின்றது. ஆய்வுக்கான அடிப்படைத் தரவுகள் கள ஆய்வு மூலம்
பெறப்பட்டன. 2012 ஆம் ஆண்டு றஹ்மத்தும்மா அவர்களிடமிருந்து நேர்காணல் மூலம் குறித்த கவிகளும் அவை பற்றிய
தகவல்களும் பெறப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், உளவியல்
நோக்கும் ஒப்பீட்டு அணுகுமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. றகுமத்தும்மாவின் புண்பட்ட மன வெளிப்பாடுகளும் அதற்கு
ஆறுதல் காண முனைவதும் எவ்விதங்களில் வெளிப்பட்டுள்ளன என்பது நோக்கப்படுவதுடன் வாய்மொழி ஒப்பாரிப்
பாடல்களின் பொருளமைப்பு இந்தக் கவித் தொகுதியிலே எவ்வாறு இயல்பாக வெளிப்படுகின்றது என்பது ஒப்பியல்
நோக்கின் அடிப்படையில் நோக்கப்படுகின்றது. அஷ்ரப்பின் இறப்பினால் தன் மனதில் ஏற்பட்ட துன்பம், அதனூடாக
ஏற்பட்ட கோபம், தவிப்பு, இரக்கம் ஆகிய உணர்வுகளையெல்லாம் வெளிப்படையாகவே கொட்டித்தீர்த்து உளச்சமநிலை
அடைகின்ற நிலையே இங்கு பிரதானம் பெறுகின்றது. அதாவது, இக்கவித் தொகுதி ஒரு ஒப்பாரிப் பாடலாகவே
அமைகின்றது. இறந்தவரின் தோற்றம், நற்குணங்கள், செய்கைகளை மீட்டி மீட்டிப் புலம்புதல், கடவுளிடமும்,
மற்றவர்களிடமும், ஏனைய உயிரினங்களிடமும், இறந்தவருடனும் உரையாடுவது, சதி செய்தவர்களைத் திட்டிப்
புலம்புவது, உயிருடன் திரும்பி வரவேண்டும் என்று ஏங்குவது என்பனவெல்லாம் நடைமுறை மரணவீட்டு ஒப்பாரியை
வெளிப்படுத்துகின்றன. இப்பாடல்களிலே, இவ்விடயங்களெல்லாம் ஒன்றின்பின் ஒன்று என்ற ஒரு அமைப்பு
ஒழுங்குமுறையில் இடம்பெறாது ஒரு சுதந்திரமான உணர்வு வெளிப்படுத்தல் இடம்பெறுவதும் பாடியவரின் துன்பியல்
ஆற்றாமையின் இயல்புநிலை வெளிப்பாட்டினைக் காட்டுகின்றது. அஷ்ரப் ஒப்பாரியில் அஃறிணைப் பொருட்களை
மனிதநிலைப்படுத்திப் பாடுகின்ற தன்மையைக் அதிகம் காணலாம். இது றஹ்மத்தும்மாவின் உணர்வுகள் கரைகடந்து
செல்லும் தன்மையைக் காட்டுகின்றன. இறுதியில் அஷ்ரப்பின் ஆத்மா நற்கதி அடைய அல்லாவைப் பிரார்த்தனை
செய்வதும் அவர் சொர்க்கம் சேர்ந்துவிட்டார் என்ற நம்பிக்கையினை வலியுறுத்துவதும் உள ஆறுதலைக் காணும்
முயல்வுகளாக அமைகின்றன. எனவே, ‘அஷ்ரப் ஒப்பாரி’ ஒரு பெண்ணின் எவ்வித பாவனைகளும் அற்ற ஒப்பாரியாக
அமைகின்றது. இந்த ஒப்பாரி மன ஆறுதலைத் தேடுவதை அடிப்படையாகக் கொண்டது. |
en_US |