Abstract:
“சிவபூமி என்று திருமூலரால் அழைக்கப்பட்ட இலங்கையின் சிவாலயங்களின் மீதெழுந்த சைவத்தமிழ் இலக்கியங்களில்
தலபுராணங்கள் முக்கிய இடம் பெறுகின்றன .இத்தல புராணங்கள் மூர்த்தித்தல தீர்த்தம் பற்றிய கோயிற் பண்பாட்டை
சிறப்பாக புலப்படுத்துகின்றன. சைவ பண்பாட்டில் பல்வேறு பரிணாமங்களையும் விரித்துரைக்கும் நூல்களாகவும்
விளங்குகின்றன. சைவத் தமிழரின் பண்பாட்டுத்துவம் சைவசித்தாந்தமாகும்.சைவ சித்தாந்த மரபு மிகவும்
தொன்மையானது. இந்திய தத்துவ சிந்தனை மரபில் இன்றும் நிலைத்து வாழும் நெறியொன்றாகச் சைவசித்தாந்தம்
விளங்குகின்றது. சிவனை முழுமுதல் இறைவனாக கொண்டமைந்த சைவசித்தாந்தமானது தத்துவ ரீதியிலும் சமய
நிலையிலும் செழுமைக்குரிய வகையில் அமைந்துள்ளது. பதி,பசு,பாசம் எனும் முப்பொருட்களும் உண்மை என்பதே
சைவ சித்தாந்த கொள்கையாகும். இச்சைவ சித்தாந்தமானது இந்திய தத்துவ மரபில் மட்டுமன்றி ஈழத்திலும் சிறப்பான
நிலையில் வளர்ச்சிபெற்று உள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். இவ்வகையில் கி.பி. 1240- கி.பி 1620 வரையான
ஆரிய சக்கரவர்த்திகள் காலத்தில் தோன்றிய தலை சிறந்த புராணங்களுள் தட்சண கைலாச புராணம், திருக்கரைசைப்
புராணம் என்பன விளங்குகின்றன. இவ்விரு புராணங்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றமை
ஈழத்து சைவசித்தாந்த வளர்ச்சியை எடுத்தக் காட்டுவனாய் உள்ளன. தலபுராண ஆசிரியர்களின் சைவசித்தாந்த புலமை
இலங்கையின் சிவாலயங்கள் மீதெழுந்த தலபுராணங்களில் சைவசித்தாந்த கருத்துக்கள் விரவியிருக்க காரணமாயிற்று.
அந்தவகையில், இவ்விரு புராணங்களும் தலபுராணங்களாக காணப்படினும் அவற்றுள் சைவசித்தாந்த கருத்துக்கள்
காணப்படுகின்றன என்பதே ஆய்வுப் பிரச்சினையாக அமைந்தது. இலங்கையில் தோன்றிய இவ்விரு புராணங்களிலும்
காணப்படும் சைவசித்தாந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வின் முதல்
நிலைத்தரவுகளாக தட்சணகைலாச புராணம், திருக்கரைசைப்புராணம் ஆகிய மூல நூல்களும், இரண்டாம்
நிலைத்தரவுகளாக சைவசித்தாந்தம் தொடர்பாக வெளிவந்த நூல்களும் கட்டுரைகளும் பிற ஆக்கங்களும் அமைகின்றன.
இவ்வாய்வு நோக்கத்தினை அடைந்துக்கொள்ளும் பொருட்டு விவரண ஆய்வு முறையாக அமைவதோடு சைவசித்தாந்த
சாஸ்த்திரங்களில் இடம்பெறுகின்ற கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆராய்வதினால் ஒப்பீட்டாய்வு மூலமும்
மேற்கொள்ளப்படவுள்ளது. இறுதியாக இவ்வாய்வானது, திருக்கரைசைப் புராணம் தட்சணகைலாச புராணம் என்பன ஈழத்து
தமிழகத் தொடர்பை பொருள் மரபாகக் கொண்டு இறைவனதும் அவனுரையும் தல சிறப்பு மகிமையினையும் கூறுவதோடு,
சைவ சித்தாந்தக் கருத்துகள் மூலம் தத்துவக் கோட்பாட்டையும் விளக்கி நிற்பதைக் முடிவாக உரைக்கும்.