Abstract:
இலங்கையில் இந்து, பௌத்த மத மக்கள் தமக்கிடையே பண்பாட்டில் மிக நெருங்கிய தொடர்புடையவர்களாக
உள்ளனர். இங்கு இந்துக்களும் பௌத்தர்களும் பண்பாட்டில் இடைவினை களுக்குட்படுகின்றனர். அவை
உடன்பாடானதாகவும் எதிர்மறையானதாகவும் அமைகின்றன. அம்பாறை மாவட்டம் மூவின மக்களும் செறிந்து
வாழுமிடமாகும். பௌத்தர்களோடு இந்துக்கள் இணைந்து வாழும் பல பிரதேசங்கள் இங்குள்ளன. இங்கு இவ்விரு
மதத்தவர்க்கிடையே பண்பாட்டுக் கலப்பு அதிகமாக இடம் பெற்றுள்ளன. இறை வழிபாடுகள், வாழ்க்கை நெறிமுறைகள்,
வாழ்வியற் சடங்குகள் என்பன இப்பிரதேசத்தில் இந்துக்களிடமும் பௌத்தர்களிடமும் பரஸ்பரத் தொடர்புகளை
கொண்டுள்ளன. இவ்வகையில் இந்து, பௌத்த மக்களின் பிறப்புக் கிரியைகளுக்கிடையிலான பரஸ்பர
தொடர்புநிலைகளை வெளிக்காட்டுதல் இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். இங்கு இவ்விரு சமூகங்களுக்கிடையே
பண்பாட்டு இடைவினைகள் மூலம் பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டுள்ளமைக்கு சிறந்த அடையாளங்களாக பிறப்புக்
கிரியைகள் உள்ளன என்பது இவ்வாய்வின் பிரச்சினையாகும். இந்துக்களினதும், பௌத்தர்களினதும் மரணக்கிரியைகளை
தனித்தனியே ஆய்வு செய்து அவற்றை ஒப்பிட்டு நோக்குவதற்கு ஒப்பியலாய்வு பயன்படுத்தப்படும். களவாய்வு மூலம்
பெறப்படும் தரவுகள் இவ்வாய்வுக்கான முதலாம்தர மூலங்களாக அமைகின்றன. ஆய்வின் துணை மூலங்களாக இந்து,
பௌத்த மதங்களின் பண்பாடு, வாழ்வியல் நெறிகள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், இறுவெட்டுக்கள் என்பன
பயன்படுத்தப்படுகின்றன. அம்பாறையில் மனிதனின் பிறப்பு நிகழ்ந்தமை முதல் இடம்பெறும் சடங்குகளும் நம்பிக்கைகளும்
பல இடங்களில் இவ்விரு சமூகத்திலும் ஒரே தன்மைகளைப் பெறுகின்றன. பிறப்புக் கிரியைகளின் பண்பாட்டு
இடைவினைகள் மூலம் இடம் பெறும் இந்து பௌத்த மதங்களின் பண்பாட்டுக் கலப்பு பற்றிய ஆய்வு இத்தேவையின்
அத்தியாவசியத்தை உணர்த்தும். இத்தேசத்தின் பல்லின சமூகங்களின் ஒன்றுபட்ட நடத்தை முறைக்கும் இது
வழிசமைக்கும்.