Abstract:
ஆசிரியர்களின் பாடத்திட்டமிடலின்மைக்கும் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் அடைவு மட்டத்திற்கும் இடையிலான
தொடர்பினை அறிதல் எனும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில்
மண்முனை தென்மேற்குக் கோட்டத்திலுள்ள அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகள் 04 நோக்க மாதிரியின் அடிப்படையில்
தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் பாட அனுபவங்களை இனங்காணல், ஆசிரியர்களின் பாடத் திட்டமிடல்களை
கண்டறிதல், மாணவர்களின் அடைவுமட்ட வீழ்ச்சிக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தல், ஆசிரியர்கள்
பாடத்திட்டமிடல்களை மேற்கொள்வதற்கான ஆலோசனை வழிகாட்டல்களை மேற்கொள்ளல் தொடர்பாக பெறப்பட்ட
அளவு, பண்பு ரீதியான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ் ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக தெரிவு
செய்யப்பட்ட பாடசாலைகளில் குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகக்
காணப்படுவதோடு ஆசிரியர்களின் வாண்மைத்துவத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் ஓரளவு இடம்பெறுகின்றது.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய விடயங்களை ஒவ்வொரு நாளும் தயார்படுத்துவதில்லை. அதிபர்கள்,
ஆசிரியர்களை மேற்பார்வை செய்வது திருப்தி அளிக்கக் கூடிய வகையில் காணப்படவில்லை. ஆசிரியர்கள் பாடத்தை
உரிய வேளையில் திட்டமிடாமைக்கான காரணங்களாக வீட்டிலிருந்து பாடசாலை அதிக தூரத்தில் காணப்படல்,
பாடசாலைக்கு நேரத்திற்கு செல்வதற்கான வாகன வசதிகள் இன்மை, பாடரீதியான நிபுணத்துவமின்மை, பாடசாலையில்
வளங்கள் போதாமை, நவீன கற்பித்தல் துணைச் சாதனங்களை பயன்படுத்த தெரியாமை, வகுப்பறைச் சூழல்
கற்பித்தலை மேற்கொள்வதற்கேற்ற வகையில் காணப்படாமை போன்ற முடிவுகள் பெறப்பட்டன. எனவே ஆசிரியர்களை
நியமனம் செய்யும் போது குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து வாண்மைத்துவ பயிற்சிகளை
வழங்குதல் வேண்டும். பாடசாலையில் ஆசிரியர்கள் தேடலை மேற்கொள்ளக் கூடிய வகையில் இணைய வசதிகளை
கல்வித் திணைக்களங்கள் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடத் திட்டமிடலுடன்
வகுப்பறைக்கு செல்ல வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள் தயாரிக்கும் செயற்பாட்டுத் திட்டங்களுக்கேற்ற
வகையில் கற்பித்தலை மேற்கொள்கின்றனரா என்பதை அதிபர் மேற்பார்வை செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு நவீன
கற்பித்தல் சாதனங்கள், கற்பித்தல் முறைகளை பயன்படுத்துவதற்கான செயலமர்வுகளை கல்வித் திணைக்களங்கள்
மேற்கொள்ள வேண்டும். பாட ரீதியில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அத்துறை சார்ந்த வளவாளர்களைக் கொண்டு
கருத்தரங்குகளை நடத்துவதோடு கல்வியமைச்சு உள்வாரி, வெளிவாரியான பரிசோதனை வழிகாட்டல்களை பாடசாலை
ரீதியாக நடாத்த வேண்டும். ஆசிரியர் குறிப்பிட்ட தவணைக்குரிய பாடத்திட்டத்தை முன்னாயத்தத்துடன்
மேற்கொள்கின்றனரா, அதனை பூரணத்துவமாக நிறைவு செய்கின்றாரா என்பதை பகுதித் தலைவர், அதிபர், பாட
ரீதியான ஆசிரிய ஆலோசகர் மேற்பார்வை செய்வது கட்டாயமாகும். ஆசிரியர்களின் கற்பித்தல் முறை வாரம், மாதம்
என்ற அடிப்படையில் உள்ளக, வெளியக மேற்பார்வைகள் இடம்பெற வேண்டும்.