Abstract:
போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி பதித்த சமயம் வடபகுதியில் யாழ்ப்பாண
அரசும் அதற்குத் தென்பகுதியில் கோட்டை மற்றும் கண்டி அரசுகள் ஆகியவை காணப்பட்டன. பிற்பட்ட
காலத்தில் கோட்டை அரசின் ஆட்சிப்பகுதியிலிருந்து சீதாவாக்கை அரசும் தோற்றம்பெற்றிருந்தது.
இவற்றுள் யாழ்ப்பாண அரசானது மொழியால் தமிழ் அரசாகவும் மதத்தால் இந்து அரசாகவும்
காணப்பட்டது. எனினும் இவ்வரசு போர்த்துக்கேயர் வருகை தந்த காலம் மட்டுமன்றி அதற்கு
முன்பிருந்தே தென்பகுதியிலிருந்த சிங்கள பௌத்த அரசுகளுடன் அரசியல் உறவுகளைப்
பேணியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே போர்த்துக்கேயர் காலத்திலும் அவ்வுறவைத் தொடர்ந்து
பேணிவந்தது. இந்தவகையில் இவர்களிடையே இக்காலத்தில் பேணப்பட்ட அரசியல் உறவானது
சாதாரணமான இருபகுதிக்குமிடையிலான அரசியல் உறவாகவும் போர்த்துக்கேயருக்கு எதிராகச்
செயற்படும்வகையில் பேணப்பட்டுவந்த அரசியல் உறவாகவும் காணப்பட்டது. இவ்இரு பகுதிக்கும்
இடையே காணப்பட்ட அரசியல் உறவானது போர்த்துக்கேயர் வருகைதந்த சமயம் யாழ்ப்பாண அரசின்
ஆட்சியாளனாக இருந்த பரராசசேகரன் காலம் முதல் இறுதி அட்சியாளனாக விளங்கிய சங்கிலி குமாரன்
காலம்வரையும் நிலவியிருந்தது. இவ்வாறு இருபகுதியிடையேயும் இக் காலத்தில் பேணப்பட்ட அரசியல்
உறவானது இன மத பேதங்களைக் கடந்த அரசியல் உறவாக விளங்கியிருந்ததால் முக்கியம்வாய்ந்த
அரசியல் உறவாகப் பார்க்கப்படுகின்றது.