Abstract:
சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில், சட்டத்திற்குப் புறம்பாகத் தனி
மனிதனுக்கோ, சமுதாயத்திற்கு எதிராகவோ செய்யப்படுவது குற்றம் எனப்படும்.
அதேநேரத்தில் குற்றம் என்ற வரையறைக்குள் அடங்குகின்ற செயற்பாடுகள் சில
நேரங்களில் குற்றமற்றதாக அமைகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. குற்றம் ஏன்
ஏற்படுகின்றது என்பதற்கு பொதுவான பல காரணிகள் குறிப்பிடப்படுகின்றன. குற்றமானது
மனிதனிடமிருந்தான வெளிப்பாடா அல்லது சூழலிலிருந்தான பிரதிபலிப்பா என்பது
மிகப்பெரும் விவாதத்தினைக்கடந்து வந்ததாகும். இன்னதைச்செய் மற்றும் இதைச்
செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை ஒப்பாத அல்லது மீறுகிற எவரையும்
தண்டிக்கிற அதிகாரமும் சட்டத்திற்குரியதாக கருதப்படுகின்றது. இது சமூகத்தை ஒழுங்கு,
நெறிமுறை கட்;டுப்பாடு என்பவற்றுக்குள் ஆட்படுத்தி கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
மறுபக்கம், சட்டம் மக்களுக்கானது என்ற ரீதியிலேயே அமைகின்றது. குற்றம் ஒரு சமூக
நிகழ்வு, சமூகத்தின் கையில் தனிநபர் ஒரு கருவி அவர் புரியும் குற்றங்களில் சமூகத்தின்
பொறுப்பேற்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தண்டனை முறைகளில் வெளித்
தோன்றுகின்றன. மனிதனது வாழ்க்கைக்கான போராட்டம் இயற்கை சார்ந்ததாக
அமைந்திருந்த நிலை மாறி சமூகக் கட்டமைப்புக்கள் சார்ந்ததாக ஆகியிருக்கின்றது.
சமூகக்கட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கும் அதிகார அமைப்பானது ஒழுங்குபடுத்தல்களாலும்
வரிசைப்படுத்தல்களாலும் மனிதர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு
மனிதன் பிற மனிதர்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்கான அதிகார அமைப்பை
தக்கவைப்பதற்கு குற்றம் - தண்டனை என்ற உருவாக்கங்கள் துணைபுரிகின்றதா? என்பதனை
நோக்கமாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இரண்டாம்நிலைத் தரவுகளை
அடிப்படையாகக்கொண்ட இவ்வாய்வு விளக்கவியல் மற்றும் பகுப்பாய்வு முறைமைகளைப்
பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.