Abstract:
மனித சமுதாய மாற்றத்திற்கும், பொருளாதார, மேம்பாட்டுக்கும் சமூக அசைவிற்கும்
கல்வியே சிறந்த கருவி. கல்வியானது நுண்மதியாற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது.
இதனடிப்படையில் குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு அடித்தளமானவை.
இக்கால கற்றல் நடவடிக்கையின் போதே குழந்தையானது தனது தேவைகளைச் சிறிதளவேனும்
தானே நிறைவு செய்து கொள்ளும் சுயேச்சை நிலையை நோக்கி மெதுவாக முன்னேறுகின்றது.
இக்கால கட்டத்தில் உடல் வளர்ச்சி, உளத்திறன்கள் விருத்தியடைதல், மனவெழுச்சி தொடர்புடைய
சில துலங்கல்கள் மற்றும் சமூக வளர்ச்சி என்பவற்றை இப்பருவத்தினரிடையே அவதானிக்க
முடிகின்றது. இவ்வகையில் குழந்தையின் உளவியலை மையப்படுத்திய கற்றல் செயற்பாடுகள்
குறித்து குழந்தைக் கல்வியில் உளவியலின் செல்வாக்கு என்ற இவ்வாய்வானது முன்வைக்கின்றது.
அவ்வகையில் குழந்தைக் கல்வியும் உளவியலும் ஒன்றோடொன்று தொடர்புடைய செயற்பாடாகக்
காணப்படுகின்றது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உளவியல் இன்றியமையாத காரணியாக
அமைகின்றது. அவ்வகையில் குழந்தைக் கல்வியில் கவனித்தல் என்பது கற்றலை
முன்னெடுப்பதற்குரிய முக்கிய நிபந்தனையாக அமைகின்றது. கவனித்தல் உளவலுவுடன் இணைந்த
ஒரு தொழிற்பாடாகக் காணப்படுகின்றது.கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் ஓர் குழந்தையின் கற்றலுக்கான
கால எல்லையை நிர்ணயிப்பதில் குழந்தையின் உளவியல் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது.
மேலும் மனதை ஒருமுகப்படுத்தல், சிந்தித்தல், ஆராய்தல் வினாக்களை எழுப்புதல் என்பன
உளக்காரணிகளோடு தொடர்புடையது.அவ்வகையில் குழந்தைக் கல்வியானது குழந்தையின் உள
அறிவு அறநெறிசார் முதிர்ச்சியை ஏற்படுத்துவதனை குறிக்கோளாகக் கொண்டிருத்தல்
வேண்டும்.இவ்வாறான குறிக்கோளை அடைவதற்கு குழந்தை உள ரீதியாக முதிர்ச்சியடைந்திருத்தல்
வேண்டும். அவ்வகையில் இவ்வாய்வானது குழந்தைக் கல்வியில் உளவியலின் செல்வாக்கு எனும்
தலைப்பில் யாழ் கோட்டத்திலுள்ள பத்து பிரதேச அபிவிருத்தி நிறுவனங்களின் கீழ் இயங்கும்
முன்பள்ளிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மூன்று தொடக்கம் ஐந்து வயதெல்லையைக் கொண்ட
ஐம்பது குழந்தைகள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது.
அவ்வகையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட முன்பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வியில்
உளவியலின் முக்கியத்துவம் குறித்து இவ்வாய்வினூடாக எடுத்துரைக்கப்படுகின்றது.