Abstract:
தமிழ் இலக்கியங்கள் காலத்தால் தொன்மை வாய்ந்ததும், ஆழமான கருத்துக்களுடன்
அளப்பெரிய பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டு, பெருமையும் வலிமையும் பெற்று பல
காலக்கட்டங்களை கடந்து வந்துள்ளது. தமிழ் இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியல் பற்றிய
கருத்துக்களை சுமந்து வந்த போதிலும் மனித வாழ்வியலை அடிப்படையாக கொண்டு பழந்தமிழ்
நூல்களிலே பதினென் கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையிலே முப்பால் என்ற
பெயரோடு தனிப்பெரும் சிறப்புக்குரிய நூலாக திருக்குறள் அமையப்பெற்றுள்ளது. இதனை
உலகுக்களித்த பெருமை திருவள்ளுவப் பெருந்தகையை சாரும். அதன் முக்கியத்துவம் உணர்ந்து
பல மொழிகளின் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உலகம் முழுவதும் பிரயோக
ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மனிதனி;ன் வாழ்வியலுக்கு அடிப்படையாக
மனித நடத்தை விளங்குகின்றது. அந்நடத்தையை அடிப்படையாக கொண்டே மனித வாழ்வியலும்
அமையப்பெறுகிறது. அந்தவகையில் மனித நடத்தையை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும்
உளவியல் ஆனது உள்ளுணர்வு, கவனம், ஆளுமை, நடத்தை,ஊக்கம், உணர்ச்சி மற்றும் மூளையின்
செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படை ஆய்வாக கொண்டுள்ளது. எனவே உளவியல் ரீதியான
எண்ணக்கருக்கள் எவ்வாறான வகையில் ததும்பி உள்ளது என்பது தொடர்பாக இவ் ஆய்வின் மூலம்
ஆராயப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரையின் நோக்கமாக அமைவது தமிழர் வாழ்வியல் தொடர்பான
கருத்துக்களை இயம்பும் தமிழ் இலக்கியங்களுள் முதன்மையும் சிறப்புக்குரிய நூலான திருக்குறளில்
உளவியல் தொடர்பான கருத்துக்கள் எவ்வாறான வகையில் காணப்படுகிறது என்பதை ஆராய்வதாக
உள்ளது. விபரண முறை,வரலாற்று முறை போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன்
இக்கட்டுரையின் நோக்கமானது சிறப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.