Abstract:
பால்நிலை என்பது சமூக ரீதியாக ஆண்பால், பெண்பால் என வகுக்கின்றது. எனவேதான்
பால்நிலை என்பது ஒரு சமூகத்தால் வழங்கப்படும் அங்கீகாரமாக கருதப்படுகின்றது. இது சமூகத்திற்கு
சமூகம், கலாசாரத்திற்கு கலாசாரம், நாட்டிற்கு நாடு வேறுபட்டதாகவும் திகழ்கின்றது. இப்பால்நிலை
குறித்த மனப்பாங்கானது தமிழர் வாழ்வியலில் பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுவதை தமிழ்
இலக்கியங்களினூடாக நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இதனடிப்படையிலேயே
பால்நிலை இயல்புகள் சமூக, கலாசார கட்டமைப்புக்களிற்கேற்ப உருவாக்கப்பட்டவையாகக்
காணப்படுகின்றன. பெண் என்பவள் மென்மையானவள், அன்பானவள், இரக்கமுடையவள், கணவனுக்கு
அடங்கி நடப்பவள், குழந்தை பெற்றுத் தருபவள், குடும்பத்தைப் பேணுபவள், கற்புநெறி தவறாதவள்
எனவும், ஆண் என்பவன் உண்மையானவன், பொருளீட்டுபவன், வீரம், விவேகம், புத்திசாலித்தனம்,
தலைமைத்துவம் உடையவன் எனவும் பல பாலின இயல்புகள் சமூகத்தினால்
உருவாக்கப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றினை அடிப்படையாகக் கொண்டே பல
சமூகங்களிலும், குறிப்பாக நமது தமிழ் சமூகத்தில் பெண்ணைத் தாழ்ந்தவளாகவும் ஆணை
உயர்ந்தவனாகவும் சுட்டிக்காட்டும் போக்கு உணரப்பட்டுள்ளது. ஆயினும் இத்தகைய எண்ணக்கரு
தற்காலத்தில் மாற்றம் பெறுவதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. எனவே இவ் ஆய்வின்
நோக்கமாக அமைவது முன்னைய காலத்திலிருந்து தற்காலத்தில் பால்நிலை இயல்புகள் எந்தளவில்
அமைந்து காணப்படுகின்றன, இப்பால்நிலை இயல்புகள் எந்தளவு மாற்றத்திற்குட்பட்டுள்ளது, அவை
எந்தளவிற்கு தற்காலத்தில் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை ஆராய்வதாகும்.
இவ் ஆய்வானது யாழ் மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதுடன்,
முதல் நிலைத் தரவுகளாக அவதானமுறை, நேர்காணல்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. ஆய்வின்
மாதிரிகளாக யாழ் மாவட்டத்தில் வசிக்கும் 300 நபர்களிடம் எழுமாறான அடிப்படையில்;; 25 வயதிற்கும்
50 வயதிற்கும் இடைப்பட்ட திருமணமான, திருமணமாகாத ஆண்கள் 150 பேர் பெண்கள் 150 பேர்
என பிரிக்கப்பட்டு தரவு சேகரிக்கப்பட்டது. விபரணமுறையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டதுடன்
இவ் ஆய்வின் முடிவில் பால்நிலை இயல்புநிலை பற்றிய தற்கால சமூகக் கண்ணோட்டமானது யாழ்
மாவட்டத்தினைப் பொருத்தவகையில்; முன்னைய காலத்தினை விட பால்நிலை இயல்புகளின்
அடிப்படையான எதிர்பார்ப்புக்களிலிருந்து குறிப்பாக பெண்களின் பால்நிலை இயல்புகள் சமூகத்தில்
மாற்றமடைந்துள்ளது என முன்வைக்கப்பட்டுள்ளது.