Abstract:
அறிவின் மீதான ஆர்வம் கொண்டு அனைத்து துறைகளிலும் ஊடுருவி நெறிப்படுத்தும்
நெறியாழ்கையான மெய்யியல் விஞ்ஞானத்தின் தாய் என போற்றப்படுகின்றது. இம் மெய்யியல்
தன்னுள் எண்ணிலடங்கா எத்தனையோ துறைகள் தொடர்பாக ஆராய்கின்ற அதேவேளை மக்கள்
சார்பான அபிவிருத்திகளிலும் முக்கிய பங்காற்றுகிறது இவ்வகையில் மெய்யியல் நுணுகி ஆராய்கின்ற
துறைகளில் ஒன்றாக ஒழுக்கவியல் காணப்படுகின்றது.
“Ethics” என ஆங்கிலத்தில் பெயர் வழங்கப்படுகின்ற ஒழுக்கவியலானது குணப்பண்புகள் எனும்
அர்த்தத்தினை வெளிப்படுத்தும் கிரேக்கச் சொல்லான “Ethos” என்னும் அடிச் சொல்லிலிருந்து
தோற்றம் பெற்றதாகும். இத்தகைய ஒழுக்கவியல் மனித செயல்கள் மற்றும் மனித நடத்தையின்
தரத்தினைப்பற்றி ஆய்வு செய்கின்ற அதேவேளை மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள்
யாவும் சரியானதா?, தவறானதா?, நல்லனவா? அல்லது தீயனவா? என்பதனை எடுத்துக் கூறுவதுடன்
மானிடத் தொடர்புடய ஒவ்வொரு துறையையும் விமர்சித்து அத்துறைகளை ஒழுக்க ரீதியில் வழி
நடாத்திச் செல்கின்றது.
இத்தகைய ஒழுக்கவியல் பல மனித சார் துறைகளை ஆராய்கின்ற அதேவேளை இன்றைய உலகில்
பரவலாக நடைபெறும் ஒழுக்கமுறைச் செயலான கருக்கலைப்பு அல்லது கருச்சிதைப்பு எனும்
எண்ணக்கரு தொடர்பாக கவனம் செலுத்துகிறது. ஆணின் விந்தணுவிலிருந்து பெண்ணின் சூல்
முட்டையில் முளையமாக கர்ப்பப் பையில் தங்கியிருக்கும் முளையத்தினை அல்லது முதிர்கருவினை
உயிர்வாழக்கூடிய தன்மையை அடைவதற்கு முன் கர்ப்பப்பையில் இருந்து அகற்றி அழித்து விடுதல்
கருக்கலைப்பு அல்லது கருச்சிதைப்பு எனப்படுகின்றது .இத்தகைய கருக்கலைப்பானது
உயிர்க்கொலையினை ஆதாரமாகக் கொண்டு ஒழுக்கவியலானது தனது ஆய்வினை மேற்கொள்கிறது.
கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும்
பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும்
இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.
கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது
என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்ற அதேவேளை கருவை
வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்று கருக்கலைப்பிற்கு
ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
கருக்கலைப்பு தொடர்பான எண்ணக்கருவினை விளக்குவது தொடர்பாகவும் கருக்கலைப்பானது
ஒழுக்கவியல் ரீதியில் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்றும் இலங்கையில் கருக்கலைப்பு எத்தகைய
தன்மையில் காணப்படுகிறது என்பது தொடர்பாகவும் விளக்குவதாக இவ் ஆய்வு காணப்படுகின்றது.