Abstract:
மெய்யியலானது வாழ்க்கை பற்றிய ஒரு நோக்கையும் வாழ்க்கைக்கான திசையினையும்,
வாழ்தலுக்கான ஒரு திட்டத்தையும் கொண்டுள்ளது. மெய்யியலின் பிரதான பிரிவான ஒழுக்க
மெய்யியல் மனித வாழ்வியலில் ஒழுக்க நடத்தைகள் பேணப்பட வேண்டியவை, மற்றும் ஒழுக்க
மனப்பாங்கோடு வாழ்வதையும் இதனூடாக எது நல்லது? எது கெட்டது? என்பதை தெரிந்து
கொண்டு வாழ்வதனையும் குறிக்கின்றது. இத்தகைய மெய்யியல் சிந்தனையானது அன்றாடம் மனித
வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பாலியல் சீர்கோடு பற்றியும் தனது பார்வையைச்
செலுத்துகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பாலியல் சீர்கோடுகளுக்கு பல
வழிகளிலும் உதவியாக அமைந்து வருவது உலகமயமாதல் செயற்பாடகும். மேற்குலகம்
சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல்
மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை இது உருவாக்க விரும்புகின்றது. ஆண்,
பெண் இருபாலாருக்குமிடையில் இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான்.
இதனை இனக்கவர்ச்சி என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.
உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனித குலம் உட்பட அனைத்து
உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அமைத்திருப்பது ஆண், பெண் உறவுதான். இத்தகைய
தூய்மையான உறவு உடைக்கப்பட்டு பல்வேறு சீர்கேடுகளும், இறப்புக்களும் நிகழ்ந்து
கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைவது உலகமயமாதல் ஆகும்.
எனவே தொழிநுட்பமானது முழுக்க முழுக்க மனிதர்களுக்கு நன்மையளிப்பதாகவோ, மானுடர்களின்
நலனுக்காகவோ, மனிதகுல அமைதிக்காகவோ மாத்திரம் உருவாக்கப்பட்டுப்
பயன்படுத்தப்படவில்லை. அவை மனித குல அழிவையும், நாடுகளினது வல்லரசுத் தன்மையினை
நிலைநிறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும். துரிதகதியில் அதிகரித்து வருகின்ற தொழிநுட்பவளர்ச்சி காரணமாக
உலகில் பல பகுதிகளிலும் பாலியல் சீர்கேடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றதை நாம்
தினமும் சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சிறுவர்கள் முதல்
வளர்ந்துவருவோர் வரை இத்தகைய கொடூரமான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய
துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனார்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது உலகமயமாதல் என்பது அருமையான மிக இன்றியமையாத
கொள்கை போன்று தோன்றும். ஆனால் ஒரேயடியாக இந்த கொள்கை ஆபத்தானது என்று
சொல்லிவிட முடியாது. இருந்தும் நம் அடையாளங்கள் அனைத்தும் அழிந்த பிறகு யாருக்காக,
யாருடைய வளர்ச்சிக்காக நம் முன்னேற்றம்? என்ற வினாவை சற்றே நாம் சிந்தித்துப் பார்த்தல்
மிக நல்லது. உலகமயமாதல் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மனித
சமுதாயத்திற்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு அதிகளவில் பாலியல் சீர்கேடுகள் ஏற்படவும்
வழி அமைத்துக் கொடுக்கின்றது. இன்று குடி, களவு, விபச்சாரம், பாலியல் துஸ்பிரயோகம்
போன்றவற்றின் விளிம்பில் எமது சமூகம் தொத்திக் கொண்டிருக்கிறது. எனவே எனக்கென்ன என்று
ஒதுங்கிச் செல்லாமல் நம் உடன்பிறப்புகளுக்கு தோள்கொடுப்பதோடு, இன்றைய உலகை பற்றி
எரிக்கின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் பற்றி ஆராய்வதாகவும் இவ்வாய்வு
அமைகின்றது.