Abstract:
சமூக ஊடக இயங்கு தளங்கள் இன்று பிரபலயமாகிவிட்டன. இது பாரம்பரிய ஊடகங்களை விட
பாரிதொரு தகவல் பகிர்வுத் தளத்தினை உருவாக்கியுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், வட்சப், வைபர்,
யுரியூப், லிங்டின்(Facebook, Twitter, Whatsapp, Viber, YouTube, LinkedIn) போன்ற சமூக ஊடகங்கள் தகவல்களைப் பரிமாறுவதற்கான முக்கிய பொறிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன் சமுதாய உரையாடலிலும், சமூக சிந்தனையிலும், பொது மக்களை மத்தியில் அரசியல்
சமூக, பொருளாதார ரீதியில் மாற்றங்களை உருவாக்குவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்
பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய ரீதியில் உலக அரசியலைத் தீர்மானிப்பதில் சமூக ஊடகங்கள்
எல்லை கடந்து இன்றைய திகதியில் தொழிற்படுகின்றன. இதற்கு இலங்கை
விதிவிலக்கானதொன்றல்ல. அந்த வகையில் இலங்கையில் அரசியல் பிரச்சாரங்களில் சமூக
ஊடகங்கள் வகித்த பங்கினை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்
தேர்தல்களில் குறிப்பாக அவனிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமூக
ஊடகங்களின் பயன்பாடு இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் பெரும் திருப்புமுனையை
ஏற்படுத்தியது. முக்கிய வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன அவர்களும்
மற்றும் அவர்களது ஆதரவுக் குழுக்களும்; சமூக ஊடகங்கள் மூலம் பாரம்பரிய ஊடகங்களின்
செய்திகளை தோற்கடித்தனர். அரசியல் சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் முகம்கொடுப்பதற்குச்
சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. சமூக ஊடகங்களுக்கும் ஜனநாயக
விழுமியங்களுக்குமிடையிலான தொடர்பானது 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்
எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க இவ் ஆய்வு உதவியுள்ளது. அத்துடன் மக்களை
அரசியலில் பங்குபெறச் செய்வதிலும், அரசியல் தீர்மானங்களை எடுக்கச் செய்வதிலும் சமூக
ஊடகங்களின் தகுதியும் திறனும் வளர்ந்திருக்கின்றமை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் செயற்பாடுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் பின்புலத்தினை
அறியவும், இவ் ஆய்வு கவனம் எடுத்துள்ளது. இதற்காகப் பல்கலாசார மக்கள் வாழும் மட்டக்களப்பு
மாவட்டத்தின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதி ஆய்வுப் பிரதேசமாக கொள்ளப்பட்டு தகவல்கள்
சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு இவ் ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.