Abstract:
இலங்கையில் தற்பொழுது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்றாக
முன்னாள் பெண் போராளிகளின் வாழ்க்கையும் காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்திலே
யுத்த கால கட்டத்தின் போது பெண்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து
பின்னர் இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீளவும் தமது சமூகத்திற்கு திரும்பிய பின்னர்
சமூகத்துடன் இணைந்து வாழ்வதில் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொள்கின்றனர். சமூகத்தின்
பார்வையில் முன்னாள் பெண் போராளிகள் பற்றிய கருத்துக்களை அறிந்து அத்தகைய
சமூகத்திடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஆய்வானது
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது முல்லைத்தீவு மாவட்டத்தை அடிப்படையாகக்
கொண்டமைந்துள்ளது. இதற்காக முன்னாள் பெண் போராளிகள் 120 பேர் மாதிரி எழுமாற்று
தெரிவடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து மற்றும் நேர்காணல் ஆய்வு முறைகளை
பயன்படுத்தி ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக பொருத்தப்பாடு, மனவெழுச்சிப்
பொருத்தப்பாடு, சுயமதிப்பீடு என மூன்று வகைப்படுத்தி தரவுப் பகுப்பாய்வானது மேற்கொள்ளப்பட்டது.
சாதாரணமாக ஒரு மனிதனது மனவெழுச்சி வெளிப்பாடுகள் அவனது நடத்தையாக அமையும்.
அவ்வாறு இருக்கையில் முதலில் முன்னாள் பெண் போராளிகளது மனவெழுச்சிப் பொருத்தப்பாடின்மை
அவர்களை சமூகத்தோடு இணைந்து வாழ்வதை தடுப்பதாக அமையும். அதுமட்டுமல்ல தம்மைப் பற்றி
தாம் கொண்டிருக்கும் சுயமதிப்பீடு எதிரானதாக அமையுமிடத்து அதுவும் ஒருவரது நடத்தையை
பாதிப்பாக அமையும். அந்தவகையில் இங்கு மனவெழுச்சி மற்றும் சுயமதிப்பீடு போன்ற இரு
உளவியல் காரணிகளையும் மையப்படுத்தி சமூக பொருத்தப்பாடு அடையாமைக்கு உளவியல் ரீதியாக
இத்தகைய காரணிகளும் காரணம் என இனங் காணப்பட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வானது ஐந்து அத்தியாயங்களைக் கொண்டு விளங்குகின்றது. முதலாவது அத்தியாயத்தில்
ஆய்வின் அறிமுகம், ஆய்வின் நன்மைகள், ஆய்வின் கருதுகோள் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் அத்தியாயத்தில் ஆய்வு விடயம் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில
ஆய்வுகளின் முடிவுகள் முன் வைக்கப்படுகின்றது. அடுத்த அத்தியாயமாக திகழும் மூன்றாவது
அத்தியாயமானது ஆய்வு முறையியல் பற்றிப் பேசுகின்றது. நான்காம் அத்தியாயத்தில் முல்லைத்தீவு
முன்னாள் பெண் போராளிகளின் சமூக பொருத்தப்பாடு குறித்துப் பெறப்பட்ட தரவுகளும் அது
தொடர்பான பகுப்பாய்வும் அவர்களுக்கு ஏற்படும் உளப் பிரச்சினைகளும் முன் வைக்கப்பட்டு
பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஜந்தாம் அத்தியாயத்தில் ஆய்வுச் சுருக்கம், முடிவுகள், பரிந்துரைகள்,
கருதுகோள் பரிசோதனைகள், ஆய்வின் மட்டுப்பாடுகள் என்பன முன் வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக,
ஆய்வானது முன்னாள் பெண் போராளிகளின் கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களும்,
மனவெழுச்சிகளும், உளநலனும், சமூகத்தவரது நிகழ்கால நடத்தைகளும், அவர்கள் சமூக
பொருத்தப்பாடு அடைவதில் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டு அதற்கேற்ப
பரிந்துரையளிக்ககப்பட்டு அமைந்துள்ளது.