Abstract:
சங்ககாலம் தொடக்கம் சோழர் காலம் வரையிலான தமிழ் பக்தி இலக்கியங்களை
இராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு சோழர் காலத்தில்
தொகுப்பித்தார். இறையருள் பெற்ற அருளாளர்களால் இயற்றப்பட்ட இறைவனைப்
போற்றித் துதிக்கும் திருத்தமிழ் பாடல்கள் பன்னிரு திருமுறைகளாக
வகுக்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள இறையருட் பாடல்கள் யாவும்
சிவபிரானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளமையால் சைவத்
திருமுறைகள் என்றும் பெயர் பெறுகின்றது. பூவாரம் சூட்டி வேதநாயகனைப்
போற்றினால் விரைவில் வாடிவிடுமென்று தேவாரம் பாடிப் பரவியவர்கள் தேவார
மும்மூர்த்திகள். அதில் சம்பந்தர் என்று அன்புடன் குறிக்கப்படும் திருஞானசம்பந்த
மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் சைவத் திருமுறைகளில்
முதல் மூன்று திருமுறைகளாக இடம்பெறுகின்றன. புராண இதிகாசங்களிற்கு இந்து
மதத்தில் சிறப்பானதொரு இடம் உண்டு. புராணங்களிலே பல சமயக் கதைகள்
இணைக்கப்பட்டிருப்பதோடு பஞ்சலக்கணங்களையும் கொண்டிருக்கும். புராண
இதிகாசங்கள் விளக்குகின்றன. அத்தகைய சிறப்புக் கொண்ட புராண இதிகாசங்கள்
பற்றி சம்பந்தர் தன் திருப்பாடல்களில் கூறியுள்ளார். அந்தவகையில் திருஞானசம்பந்த
மூர்த்தி நாயனாரின் தேவாரத்தில் உள்ள புராண இதிகாசக் கதைகளை எடுத்துக்
கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். திருமுறைகளில் சம்பந்தரின் தேவாரங்கள்
ஆய்வின் எல்லையாகக் கொள்ளப்படுகின்றன. ஆய்வு நோக்கத்தினை அடைந்து
கொள்ளும் பொருட்டு, விபரணவியல் ஆய்வு முறை கையாளப்பட்டுள்ளது. இதன்
பொருட்டு சம்பந்தரின் தேவாரப் பதிகங்கள், புராண இதிகாசங்கள் என்பன இவ்வாய்வின்
இரண்டாம் நிலைத் தரவுகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வாய்வுடன்
தொடர்புடைய ஏனைய ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தள செய்திகள்,
பிற ஆக்கங்கள் என்பன இவ்வாய்வின் துணைத் தரவுகளாக அமைகின்றன. இறுதியாக
இவ்வாய்வானது சம்பந்தர் தனது தேவாரத்தில் சிவனின் சிறப்புக்களை கூற இதிகாசப்
புராணங்களை சிறப்பாக கையாண்டுள்ளார் என்பதை முடிவாக உரைக்கும்.