Abstract:
சமகால இந்திய மெய்யியலாளர்களில் இரவீந்திரநாத் தாகூரின் சிந்தனைகள் முக்கிய
இடத்தினைப் பெறுகின்றன. சமகால இந்திய மெய்யியலானது தனது பாரம்பரியத்தில் இருந்து
விடுபடாமலும் அதே நேரம் காலச் சூழலின் தேவைக்கேற்ற வகையில் சில மாற்றங்களை
உள்வாங்கியும் காணப்படுகின்றது. பாரம்பரிய சிந்தனைகளில் முதன்மைப்படுத்திய ஆன்மீக
ரீதியான சிந்தனைகளை பாதுகாத்து அதன் முக்கியத்துவத்தினையும் சிறப்பினையும் ஏனைய
சமூகத்தினருக்கு அறியத்தரும் வகையில் சமகால இந்திய மெய்யியலாளர்களின் பங்களிப்பு
காணப்படுகிறது. இவ் ஆய்வானது சமகால இந்தியாவிலே இரவீந்திரநாத் தாகூரினால்
முன்வைக்கப்பட்ட கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற
ஆன்மீக ரீதியான சிந்தனைகளை ஆராய்வதாக அமைகிறது. இவ்வாய்விற்கு பண்புசார் நுட்பம்
பயன்படுத்தப்படுகிறது. இங்கு கீதாஞ்சலி என்ற நூலானது முதன் நிலைத்தரவாகவும்
இரவீந்திர நாத் தாகூரின் கீதாஞ்சலி தொடர்பான ஏனைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள்,
இணையத்தள தகவல்கள் என்பன இரண்டாம் நிலைத்தரவுகளாக காணப்படுகின்றன.
பகுப்பாய்வு முறையியலும், விபரண முறையியலும், வரலாற்று முறையியலும் இங்கு ஆய்வு
முறையியல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஆய்வு முடிவாக ஆன்மீக அடைவானது
மனிதநேயத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படுகிறது என்பதாக அமைகிறது.