Abstract:
கல்வி என்பது அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான செயற்பாடாகும். இதனுள் பாடசாலைக்கல்வி குறிப்பிட்டு
கூறத்தக்கது. ஏனெனில் சிறுவர்கள் தமக்கான அறிவினை, ஆளுமையினை, திறன்களை பெற்றுக்கொள்ளவும்,
வெளிப்படுத்தவும்,வளர்த்துக் கொள்ளவும் சிறந்த களமாக பாடசாலை விளங்குகின்றது.
பாடசாலைக்கல்வி என்பதனுள் பாடத்திட்டங்களை கற்பித்தல், விளையாட்டுக்களின் கற்பித்தல், கலைகளை கற்பித்தல்
என்பன அடங்குகின்றன. இவற்றுள் கலைகள் சார்ந்த விடயங்கள் அழகியல் கற்கைகளுக்கூடாக கற்பிக்கப்படுகின்றன. இவ்
அழகியல் கற்பித்தல்களும் கூட மட்டுப்படுத்தப்பட்டவையாகவே பாடத்திட்டங்களில் காணப்படுகின்றன. சமூகங்களை
அடையாளப்படுத்தும் சமூகம் சார் கலைகளை கற்பித்தல் சார்ந்து திட்டமிடுதல் அவசியாகின்றது. சமூகங்களை
பிரதிபலிக்கும் கலைகளை கற்கும் போது அவற்றிற்கு பரீட்சயமாவதுடன் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான
அல்லது முன்னெடுப்பதற்கான அறிவும் தெளிவும் திறனும் கூடியவர்களாக சிறுவர்கள் உருவாகிறார்கள்.சமூகம் சார்ந்த
பிரக்ஞை ரீதியிலான கற்றல் என்பது அவசியமானதும் தவிர்க்க முடியாததுமாகும். கல்வி எனும் புள்ளியில் தான் தனி
மனிதர் சமூகத்துடன் சங்ககமமாகின்றனர்.கல்வியின் பரிமாணமானது சமூக மாற்றத்துக்குரிய கருவியாகவும் சமூக
ஈடேற்றத்துக்குரிய கருவியாகவும் இயங்குதலாகும்.
குறிப்பாக வசந்தன் கூத்துப் பற்றிக் கூறின் அது சிறுவர்கள் மாத்திரம் பங்கேற்கும் தமிழரின் பாரம்பரியக் கலை
வடிவமாகும்.அதிலும் 12-14 வயதிற்குற்பட்ட ஆண் சிறுவர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். இதில் பெண்
சிறுவர்கள் பங்கு கொள்ளும் மரபு இல்லை.இக் கலை வடிவம் குறிப்பாக கோயிலை மையப்படுத்திய கலை
வடிவமாகையால் பெண் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு சில காரணங்கள் சமூகத்தவர்களால், இக்கலை
முன்னெடுப்பாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. இதனால் சிறுவர்களுக்குரிய ஒரே ஒரு கலை வடிவம் சிறுவர்களின்
ஒரு பகுதியினருக்கு பரீட்சயமாகாத வடிவமாகவே காணப்படுகின்றது. இக் கலையினை பாரம்பரியமாகக் கொண்டிருக்கும்
கிராமங்களில் இந்நிலையே காணப்படுகின்றது.(உதாரணம்: களுதாவளைக் கிராமம்) ஆனால் சிறுவர்களுக்கான கலை
வடிவத்தினை பயில்வதற்கும்; அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்குமான பாரபட்சமற்ற பால்நிலை
சமத்துவ ரீதியில் கற்கும் உரிமையினை சிறுவர்களுக்கு வழங்க வேண்டியது சமூகத்தினது கடமையும் பொறுப்புமாகும்.
பொதுவாக பால்நிலை பற்றிய எண்ணப்பாட்டினை எடுத்துக் கொண்டால் சமூகம் வரையறுக்கும் தன்மையே பால்நிலை
ஆகும்.சமூகச் சூழலாலும் பண்பாட்டு பின்னணிகளாலும் தான் ஆண்மை, பெண்மை என நாம் பிரித்துப்
பார்க்கின்றோம்.இந்த நிலை ஆண்களின் உலகம் வேறு பெண்களின் உலகம் வேறு என மனித இனத்தை இரண்டாகப்
பார்ப்பதன் மூலம் உருவாகிய கருத்துருவாக்கமாகும்.ஆணையும் பெண்ணையும் இயற்கை படைக்கிறது.ஆனால் அதை
ஆண்மையாகவும் பெண்மையாகவும் சமூகமே மாற்றியமைக்கின்றது.இத்தகைய பின்புலங்கள் சிறுவர்களிலும் ஆதிக்கம்
செலுத்துவதன் பின்விளைவே இவ் வசந்தன்கூத்து கற்பதில் இருக்கும் தடைகளாக காணப்படுகின்றன.
எனவே தடையான காரணிகளை கண்டறிவதற்காகவும் பாடசாலை திட்டத்தின மூலம் இக்கலையினை பரவலாக்குதல்
தடையின்றி சிறுவர்கள் அனைவரும் அவர்களுக்கேயுரிய கலையினை பயில்வதற்கும் அதனை சமூகம் சார்ந்து
பிரயோகிப்பதற்குமான சாத்தியப்பாடுகளை இவ் ஆய்வு முன்வைக்கின்றது. அந்த வகையில் சிறுவர்களுக்கு
பயிற்றுவிக்கும் விதத்திலும் அறிவூட்டும் விதத்திலும் அதனூடாக சமத்துவப்பண்பை ஏற்படுத்தவும் சமூகக்கலைகள்
மூலம் சமூகம் சார்ந்து சிந்திக்கவும் செயற்படவும் தூண்டும் நோக்கில் சிறுவர்களை மையப்படுத்திய வசந்தன்
கூத்தினை பாடசாலை கல்விசார் கலைத்திட்டத்தினுள் உள்வாங்குவதன் அவசியங்களை இவ் ஆய்வு கண்டுள்ளது.