Abstract:
மனிதனின் கருத்துப்பரிமாற்ற ஊடகமாக மொழி விளங்குகின்றது. மொழி ஒலி, ஒலியன்,
உருபன், சொல், பொருள், வாக்கியம் என்னும் உட்கூறுகளை உள்ளடக்கியுள்ளது. சமூக
வரலாற்றையும் மொழிவரலாற்றையும் அறிவதற்க்கு இலக்கியங்களும் மொழிகளின் இலக்கண
ஒழுங்குமுறைகளை அறிய இலக்கணங்களும் பயன்படுவதைப்போல மொழியிலுள்ள
சொற்றொடர்களை அறிவதற்கு அகராதிகள் உதவுகின்றன. அகராதிகள் மொழிகளிலுள்ள
சொற்களின் பொருள்களை அறிவதற்கு உரியவை மட்டுமல்ல. அவை மொழிகளின் வளத்தையும்
வரலாற்றையும் வெளிப்படுத்துபவையாக காணப்படுகின்றன.
தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் சொற்பொருள் களஞ்சியமானது நிகண்டு என்னும்
செய்யுள் வடிவத்திலிருந்து பரிணமித்து உரையாடல் அகராதி வடிவத்தை அடைந்தது. தகவல்
புரட்சிக் காலமான இக்காலத்தில் மின்னாக்கம் பெற்று மின்னகராதி வடிவத்தில் இயங்குகின்றது.
இவ்வாறாக காலமாற்றத்திற்கேற்ப தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்வதில் தமிழ் மொழிக்கு
நிகராக தமிழ் மொழியே காணப்படுகின்றது. தமிழ்மொழியில் மின்னகராதிகள் பல பலரது கடின
உழைப்பாலும் முயற்சியாலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவ்வாறாக தற்காலத்தில்
இணையத்தளத்தில் காணப்படுகின்ற பிரதானமான தமிழ்மின்னகராதிகளையும் அவற்றின்
பயன்பாடுகனையும் விளக்குவதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயனாக்க மொழியியலை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வானது தற்காலத்
தமிழ்மின்னகராதிகளை ஆய்வு எல்லையாகக் கொண்டு விளக்க ஆய்வுமுறையியலின் ஊடாக
கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது தமிழ்மின்னகராதிகளின் உத்தியோகபூர்வ
இணையத்தளங்களை முதன்நிலைத் தரவுகளாகவும் தமிழ் அகராதியியல், தமிழ்
மின்னகராதிகள் என்பன தொடர்பாக விளக்கும் நூல்கள், சஞ்சிகைகள், மாநாட்டு மலர்கள்,
ஆய்வுக்கட்டுரைகள், பருவஇதழ்கள் முதலியவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளை
துணைநிலைத் தரவுகளாகவும் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது
எதிர்காலத்தில் தமிழ்அகராதியியல், தமிழ் மின்னகராதிகள் தொடர்பாக ஆராய்வோருக்கு
பயனுள்ளதாக அமைவதோடு அகராதியியல் தொடர்பாக கற்போருக்கும், கற்பிப்போருக்கும்
சிறப்பாக மொழியியலில் சொற்களஞ்சியங்கள் தொடர்பாக கற்கின்ற மாணவர்களுக்கும்
கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.