Abstract:
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மலையகச் சிறுகதை வரலாறு ஓர் உபபண்பாட்டுக் கூறாக
இருந்துவருகின்றது. அவ்வாறு அமைவுபெறுவதற்கு அது தனக்கெனத் தனித்துவமான பண்புகளைக்
கொண்டதாகவும், குறிப்பிடத்தக்களவு சிறுகதைகளை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றமை
முக்கியமான காரணமாகும். மலையகச் சிறுகதைகள் என்ற பொதுத்தளத்தில் அவற்றைச் சுட்டினாலும்
அதற்குள்ளும் பல பிராந்திய அடையாளங்கள் முனைப்புப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிராந்தியமும் சில
தனித்துவமான வாழ்வியில் முறைகளையும் புவியியல் அமைப்பினையும் கொண்டுள்ளது. இவற்றுள்
மாத்தளைப் பிராந்தியம் பல வகையிலும் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. இப்பிராந்தியத்திலிருந்து
மேற்கிளம்பிய புதைகதை ஆசிரியர்களுள் மலரன்பன் மிக முக்கியமானவர். இதுவரைக்கும் அவரது
கோடிச்சேலை, பிள்ளையார் சுழி ஆகிய இரு சிறுதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
இத்தொகுப்புக்களில் மொத்தமாக இருபத்துநான்கு கதைகள் உள்ளன. இத்தொகுப்புக்களுடாக
மலரன்பன் சித்திரித்துக்காட்டும் புதிய படைப்புவெளிகள் குறித்து விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட
வில்லை. அவ்வகையில், மலரன்பனின் சிறுகதைகளில் இடம்பெறும் புதிய படைப்புவெளிகள் யாவை
என்பதை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலரன்பனின்
இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களிலும் காணப்படுகின்ற கதைகளை முதன்மை ஆதாரங்களாகக்
கொண்டு, உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியலில் இவ்வாய்வு அமைகின்றது. மலரன்பனின் சிறுகதைகள்
பல்வேறு பொருண்மைகளில் இயக்கம் கொள்கின்றன. மாத்தளைப் பிராந்தியத்துக்கேயுரிய றப்பர் தோட்ட
உற்பத்தி முறைகளையும் அவ்வுற்பத்தி முறைகள் தோற்றுவிக்கின்ற வாழ்வியல் சிக்கல்களையும்
சிறுகதைகளாகக் கொண்டு வந்தவர்களுள் மலரன்பன் தனித்துவமானவர். றப்பர் தோட்ட வாழ்க்கை
முறைக்குள் காணப்படும் அதிகார முகங்களையும் அடக்குமுறைகளையும் சிறுகதைகளில்
பதிவுசெய்தவராக மலரன்பன் காணப்படுகின்றார். இலங்கையில் மிக நீண்ட காலமாக நிலவிய
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மலையக மக்களை எவ்வாறெல்லாம் பாதித்தன என்பதை
சித்திரிக்கும் பல கதைகளை எழுதியவர்களுள் மலரன்பனும் ஒருவர். அவரது தார்மீகம், நந்தாவதி,
தமிழச்சாதி முதலான கதைகள் இவ்வகையில் சுட்டிக்காட்டத்தக்கவை. பெரும்பான்மை சமூகத்தின்
மத்தியில் வாழ்ந்துவந்த பெருந்தோட்ட மக்கள் இனவன்முறைகள் நிகழ்ந்த காலப்பகுதிகளில்
எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்பதே இக்கதைகளின் உள்ளீடாக அமைந்துள்ளது. மேலும்,
சிங்கள கொலனிகளில் வேலையும் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மலரன்பன்
சிறுகதைகளாக்கியுள்ளார். இவற்றோடு, பெருந்தோட்டத்துறைக்குள்ளிருந்து மத்தியக் கிழக்கு
நாடுகளுக்குச் சென்ற பெண்கள் அங்கு எதிர்நோக்குகின்ற வாழ்வியல் சிக்கல்களையும் அவர்கள்
எதிர்நோக்கும் சவால்களையும் தமது கதைகளில் பதிவுசெய்கின்றார், மலரன்பன். இவ்வகையான
கருப்பொருட்களும் கதைநிகழும் இடமுமே மலரன்பன் என்ற புனைகதையாசிரியரின் தனித்துவ
அடையாளமாகவும் அமைகின்றது எனலாம்.