Abstract:
மொழி, பண்பாடு, கலாசாரம், நாகரீகம் என்பனவெல்லாம் இயற்கையின் வெளிப்பாடுகளல்ல. அவை
சமூகக் கருத்தியல்களால் காலாகாலம் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு தனக்கானதொரு
அடித்தளத்தை உருவாக்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஆதிக்கக்
கருத்தியல்கள் பெண் மையப் படுத்தியவாறான கலாசாரக் காவலரண்களாக உருவாகின. இவை
உருவாக்கிய பண்பாட்டியல் ரீதியிலான போதனைகள் சமூகக் கருத்தியல்களில் ஆட்கொண்டு பெண்கள்
மீதான வன்முறையாக வெளிப்பட்டது. இதில் கலை, இலக்கியம், சினிமா போன்றவற்றினூடான
கருத்தியல் உருவாக்கமானது ‘பெண்’ என்பதற்கான கட்டமைப்பினை உருவாக்கிக் கட்டிக்காப்பதில்
பெரும்பங்கினை வகிக்கின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புனிதம் எனும் கட்டமைப்பின் மூலம் மனித
உணர்வுகளும் உரிமைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. இச்செயற்பாடு மாற்றப்பட வேண்டியது அவசியம்
பற்றிய சாத்தியங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனடிப்படையில்
‘பெண்’ பற்றிய சமூக உளவியல் கட்டமைப்பானது தகர்க்கப்படல் சாத்தியமானதா? என்பதே
இவ்வாய்விற்கான மையப்பிரச்சினையாகும். இக்கட்டமைப்பானது மாற்றப்பட வேண்டிய அவசியம்
உணரப்படினும் அதற்கான இலகுவான சாத்தியப்பாடு இல்லை என்ற முடிவு பெறப்படுகின்றது. எனவே
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றின் தொடர்ச்சியாக செயல்படுவதை விட்டும் வெளியேறி அதற்கான
மாற்று என்ன என்பது பற்றி சிந்திப்பதன் தேவையையும் இக் கட்டுரை விளக்குகின்றது. மேலும்
இவ்வாய்வு பண்பு ரீதியிலான விபரிப்பு முறை மற்றும் விமர்சன முறையில் அமையப்பெற்றுள்ளது
என்பதனால் இதற்கான தரவுகள் புத்தகங்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள், இணையத்தளம்
என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.