Abstract:
தமிழ் பேசுகின்ற மக்கள் வாழ்கின்றதும், பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகின்ற தமிழ் கலாசார
பாரம்பரியங்களுக்கு ஏற்ப தமது வாழ்க்கைக் கோலங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழ்கின்றதுமான
பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களை தமிழ் சமுதாயங்கள் எனலாம். எமது நாட்டைப்
பொறுத்தளவில் தமிழ் சமுதாயம் எனும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்
உள்ளடக்கப்படுகின்றன. தமிழர் பாரம்பரியங்களை நோக்கின் தொன்று தொட்டு சடங்காசாரங்கள் மற்றும்
விழாக்களை அனுஸ்டிப்பதன் மூலம் உளவளத்துணை செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இது உளவளத்துணை எனும் நேரடிப் பதமாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், சீர்மியம், சீர்மிய உளவியல்,
வழிகாட்டலும் ஆலோசனையும், அறிவுரை பகர்தல் போன்றவாறான சொல்லாடல்களினூடாக பெரிதும்
பேசப்பட்டுள்ளது.
அவ் வகையில் உளவளத்துணை என்பது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமத்தை
எதிர்கொள்கின்ற மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதில்சிரமப்படுகின்றவர்களுக்கு தகுதியான
ஒருவரால் வழங்கப்படும் ஆலோசனை வழிகாட்டல் செயன்முறை ஆகும். அதாவது துணைநாடுனர்
தன்னுள் மறைந்து கிடக்கும் நற்பண்புகள், மனப்பாங்குகள், திறமைகள் என்பவற்றை அடையாளம் கண்டு
விருத்தி செய்யவும், சாதகமான புறச் சூழல்களை அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் ஆளுமையில்
வளர்ச்சி காணவும்,, சமூகத்தினது தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும்,
வளர்ச்சி தராதவற்றைக் கைவிடவும் உதவுதலே உளவளத்துணை செயற்பாடு எனலாம்.
இத்தகைய உளவளத்துணையானது இன்று சகல துறைகளிலும் முக்கியம் பெற்று வரும் வேளையில்
அண்மைக்காலங்களில் பாடசாலைகளில் இதன் அவசியமும் தேவையும் சற்று அதிகமாகவே
உணரப்பட்டுள்ளது என்பதனை கண்கூடாக காண முடிகின்றது. பாடசாலை உளவளத்துணை என்பது
பாடசாலைகளின் விரிவான பாடத்திட்டத்தின் அல்லது இலக்கிற்குள் ஒருங்கிணைந்த கூறாக
காணப்படுகின்றது. இது மாணவர்களின் கல்வி, தொழில் மற்றும் தனியாள், சமூக விருத்திகளை
மேம்படுத்துவதற்கும் மற்றும் அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் செயன்முறையை
ஊக்குவிப்பதற்குமான திட்டங்களைக் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்ற செயன்முறை என
American school counselling Association குறிப்பிடுகின்றது. இன்றய இலங்கையின் கல்வித்
திட்டங்களக்கு அமைவாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் வழிகாட்டலும் ஆலோசனையம் எனும் பிரிவில்
உளவளத்துணை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மாணவர்களின் உளநலத்தினை
பாராமரிப்பதில் வழிகாட்டுபவர்களாக காணப்படுகின்றனர். அண்மைக் காலங்களில் பாடசாலை
உளவளத்துணையாளர்களின் நியமனம் அதிகமாக இடம்பெற்று வருகின்ற நிலையிலே இவர்கள்
அதிகமான சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாய்வானது வவுனியா மாவட்டத்தின் பாடசாலை உளவளத்துணையாளர்கள் எதிர்கொள்ளும்
சவால்களை ஆராயும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்ட்டுள்ளது. இதற்காகான முதலாம்நிலைத் தரவு
சேகரிப்பிற்காக நேர்காணல் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் நிலைத் தரவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டு
விபரணப் பகுப்பாய்வின் மூலம் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது.