Abstract:
துறைமுகம் என்பது கப்பல்கள், படகுகள் தங்கிச் செல்வதற்குரிய இடமாகும். இத்துறைமுகம் இயற்கைத்
துறைமுகம், செயற்கைத் துறைமுகம் என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றன. இத்துறைமுகங்கள்
நாட்டின் பொருனாதாரத்தில் பெரும்பங்காற்றுகின்றன. 2008ஆம் ஆண்டு டென்மார்க் அரசின் 46.1 மில்லியன்
யூரோ வட்டியில்லாக் கடனும் கட்டுநிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படு, 2013ஆம் ஆண்டு முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில்
பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் ஒலுவில் கடற்கரைப் பகுதியாகும். இக்கிராமத்தில் 2000 மீனவர்
குடும்பங்கள் வாழ்கின்றன அவற்றுள் 2150 நபர்கள் மீனவர்களாக தமது வாழ்வாதாரத்தை தேடுகின்றனர்.
இங்கு மயில் தத்தி, ஹம்பர் தத்தி, மைனர் தத்தி, 4000 தத்தி, பென்ஸ் வத்த தத்தி, ஏலங்கா தத்தி,
பழைய தத்தி, சாக்கன் தத்தி, நட்டம் தத்தி, ராணி தத்தி, ஹிஜ்ரா தத்தி, வல்லரச தத்தி, புதுத் தத்தி
என 13 கரைவலைகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டனர். ஒவ்வொரு கரைவலையிலும் சுமார்
100 க்கும் 150 க்கும் இடைப்பட்ட தொழிலாளர்கள் தொழில் பெற்று தமது வாழ்வை அமைத்துக்
கொண்டனர். அத்துடன் குடாத்துறை, நடுத்துறை, லைட் ஹவுஸ் துறை, பின்னங்குடாத் துறை என நான்கு
துறைகளிலும் 42 தோணிகளும் 205 இயந்திரப் படகுகளும் மாயவலை, ஆடுகயிறு, இழுவவலை, எறிகயிறு,
சுருக்கு வலை, சில்லி வலை,பண்ணை என பல்வேறு அமைப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு
வருகின்றனர். இவற்றில் ஒரு தோணிலில் 7 ஊழியர்களாகவும் படகில் 5 ஊழியர்களாகவும் தொழிலைப்
பெற்று தமது குடும்ப பொருளாதாரத்தை செப்பனிட்டுக் கொள்கின்றனர்.
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட கடலரிப்பின் விளைவாக மீன் பிடியை பிரதான
தொழிலாகக் கொண்ட இக்கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடிக்காக
கடலுக்கு செல்லும் மீனவர்கள் தமது உடமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்தை அஞ்சிய
நிலையிலையிலேயே தமது கடல் பயனத்தை மேற்கொள்கின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள
கடலரிப்பினால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை அடைந்துள்ளமை இவ்வாய்வின் ஊடாக
கண்டறியப்பட்டுள்ளன. பண்புசார் மற்றும் அளவுசார் ரீதியிலான ஆய்வாக அமைவதால், விடய
விபரிப்பினை மேற்கொள்ளத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு, ஆய்வுப் பிரதேசத்தில்
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறியத் தேவையான தரவுகளும் தகவல்களும், முதலாம்
மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள்
புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு முறையினைக் கொண்டு விபரிக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் தொகுத்தறி
முறையினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாகவும்,
நாட்டினதும் மக்களினதும் நலனினை அடிப்படையாகக் கொண்டும் வீண் செலவற்ற ஆரோக்கியமான
சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையுடன் தொடர்பு படுத்தி தீர்மானங்களை மேற்கொண்டு
நடைமுறைப்படுத்துவது நாட்டினையும் மக்களினையும் முன்னேற்ற முடியும் என இவ்வாய்வு
பரிந்துரைக்கின்றது.