Abstract:
இன ஒற்றுமை மிக்க நாடுகளில் ஒன்றாகவே இலங்கை காணப்படுகின்றது. ஆங்கிலேயரின்
பிரித்தாழும் கொள்ளையினால் இந்நாட்டு மக்கள் இன, மொழி ரீதியிலான வேறுப்பாடுகளை கொண்டு
தமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக பல இனக்கலவரங்களும்
இலங்கையில் இடம்பெற்று வருகின்றன. இருந்தபோதிலும் இவர்களிடையே ஒன்றுபட்டுவாழும் தன்மை
அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்தோர் சிறப்பம்சமாகும். சிங்களம், தமிழ் என்ற இரு
மொழியை பயன்படுத்தும், பௌத்தம், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றும் மக்கள்
கூட்டத்தினரே இங்குள்ளனர். இம்மதங்களில் இஸ்லாமிய மதமானது கி.பி 7ஆம் நூற்றாண்டுகளின் பின்னர்
ஏற்கனவே இலங்கையுடன் வர்த்தகத்தொடர்புகளைக் கொண்டிருந்த அரேபியரால் பரப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விவசாயத்தின் மீது தமது முழுகவனத்தையும் செலுத்திய சுதேசிகள், வர்த்தகத்தை
மேற்கொள்ள விரும்பவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இலங்கை
மன்னர்கள் முஸ்லிம்களின் துணையை நாடினர். வரத்தகத்திற்காக தலைநகர்களுக்கு வந்தவர்கள் அங்கு
தங்குவதற்காக வீடுகள் அமைக்கப்பட்டதுடன், பதவிகளும் வழங்கப்பட்டன. பிற்பட்டகாலங்களில்
ஐரோப்பியரது செயற்பாடுகளால் மத்திய மலைநாட்டுப்பகுதிகளிலும் இவர்களது குடியேற்றங்கள்
நிறுவப்பட்டது. மாத்தளை மாவட்டத்தினுடனான இஸ்லாமியரின் தொடர்புகள் வர்த்தகத்துடன்
ஆரம்பிக்கப்பட்டதன் பின்னனியில் இன்று அப்பிரதேசத்தின் முக்கிய மக்கள் கூட்டத்தினராக அர்கள்
மாற்றமடைந்துள்ளனர். தமக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டபோதிலும் மற்றைய
இனத்தவர்களுடன் ஒன்றுபட்டு வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். மாத்தளை மாவட்டத்தின்
அரசியல், கல்வி, வியாபாரம், விளையாட்டு துறைகளில் இவர்களது பங்களிப்பானது முக்கியத்துவம்
கொண்டதாகவே உள்ளது. கி.பி 18ஆம் நூற்றாணடில் இருந்து பலவழிகளிலான இவர்களது
இப்பிரதேசத்தினுடனான தொடர்புகள் இன்று செம்புவத்தை சுற்றுலாத்தளத்தின் மத நம்பிக்கை ஊடாக
திசைதிருப்பப்பட்டு வருகின்றமை ஆய்வுகளுக்குட்பட வேண்டியதொரு விடயமாகவுள்ளது. இங்கு வழமைக்கு
மாறாக அதிகமாக இஸ்லாமியர் குறிப்பாக அரேபிய, பாகிஸ்தானிய இஸ்லாமியரது வருகையானது பல
கேள்விகளை உள்ளடக்கிய நிலையில், அதற்காக குறிப்பிடப்படும் காரணங்கள் ஆதாரங்களை
உள்ளடக்கியதாக காணப்படவில்லை. இருப்பினும் இவர்களது நம்பிக்கை வாயிலாகவே இன்று அவ்விடம்
அதிகமாக உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்றுவருகின்றது என்பது
மறுக்கமுடியாத உண்மையாகும். இலங்கையுடனான அரேபியரின் தொடர்புகளைக் கொண்டு இன்று
இலங்கை முஸ்லிம்கள் தமது வரலாற்றினை எழுதிவருகின்றனர். இவர்களுடைய இலங்கையுடனான
தொடர்புகளைக் கொண்டு சில ஆதாரங்களை முன்வைக்கின்ற போதிலும் அவையும் பல கேள்விகளுக்கு
உட்பட்டதாகவே காணப்படுகின்றன. ஆகவே இவ்வாய்வானது செம்புவத்தையுடனான இஸ்லாமியரது
தொடர்புகளைப் பற்றி ஆராயும் நோக்கில், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்கள், இலக்கியங்கள், இணையம்
என்பனவற்றைக் கொண்டு விவரண ஆய்வுமுறையியலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.