Abstract:
சமயம் என்பது உலகலாவிய நிறுவனமாக சமூகத்தில் முக்கியத்துவம் உடையதாக காணப்படுகின்றது.
சமயம் எனும் போது புனிதமான ஒன்றினைபற்றிய நம்பிக்கைகளும் செயன்முறைகளும் அடங்கிய
தொகுதி என சமூகவியலாளரான எமில்துர்கைம் கூறுகின்றார். ஓவ்வொரு சமயங்களும் பல்வேறுபட்ட
சடங்கு வழிபாட்டு முறைகளின் வழி சமூகத்தில் ஒருமைப்பாடு கூட்டுணர்வினை ஏற்படுத்துவதாக
அமைகின்றது. அந்த வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே புனிதர்கள் வழிபாடு முக்கியத்துவம்
உடையதாக உள்ளது. முதலாம் புனிதரான வனத்து சின்னப்பர் வழிபாடு மலையக கத்தோலிக்கர்களிடம்
பரந்து காணப்படுகின்றது. ஆய்வுப் பிரதேசமான ஸ்டயர் தேயிலை தோட்டத்தில் கிறிஸ்தவ, இந்து,
பௌத்த, இஸ்லாம் என பல்மத மக்கள் வாழும் இடமாக காணப்படும் அதேவேளையில் கத்தோலிக்க
கிறிஸ்தவர்களுடன் இணைந்து இந்துஇ பௌத்த மதத்தவரும் இப் புனிதரை வழிபடும் அதேவேளை
இஸ்லாமியர் இவ் வழிபாட்டிற்கான உதவிகளை வழங்குவதனூடாக சர்வமத அனுசரனையுடன் இவ்
வழிபாடு இடம்பெறுகின்றது. இவ் ஆய்வானது பண்புசார் ஆய்வாக மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்
கருவிகளாக ஆழமான நேர்காணல், விடய ஆய்வு, பங்குபற்றும் அவதானம் போன்ற ஆய்வுக் கருவிகளின்
ஊடாக முதலாம் நிலைத் தரவுகளும், கிறிஸ்தவ மதநூல்கள், கிறிஸ்தவ சஞ்சிகைகள் ஊடாக
இரண்டாம் நிலைத்தரவுகளும் பெற்று தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு
முடிவுகள் பெறப்பட்டது. இப் புனிதர்க்கான ஆலயம் தேயிலை மலைகளிற்கிடையில் மிக எளிமையான
வகையில் அமைந்துள்ளது. தோட்ட தொழிலாளிகளான இம்மக்கள் தொழில் நலன்வேண்டியும் பாதுகாப்பு
வேண்டியும் தொழிலாளர் தினமான மே 1ம் திகதி தொழிலாளர்கள் மதபேதமின்றி கிராமிய வழிபாட்டு
முறைகளினை ஒத்தவகையில் பந்தலிட்டுஇபடையல் செய்து வழிபடுகின்றனர். தங்கள் பண்பாடுகளிற்கேற்றவகையில் இவ்வழிபாடமைவதால் இவ் வழிபாடு நிலைத்து நிற்கின்றது. இவ்
வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள் மக்கள் தங்களால் இயன்ற அளவு வழங்குகின்றனர். விசேட
நேத்திக்கடன் உடையவர்கள் உயிர்கோழியை வழங்குகின்றனர் இவற்றை ஆலய முன்றலில் சமைத்து
எல்லோரும் பகிர்ந்துண்ணுகின்றனர். மக்கள் புனிதவனத்து சின்னப்பர் மீது ஆழமான நம்பிக்கை
வைத்துள்ளனர். தேவாலய மதகுருமார்களின் தலையிடின்றி பாமர மக்களினால் இவ் வழிபாடு
மேற்கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் வழிபாட்டில் மதபேதமின்றி மக்கள் பொதுவான சமயம் என்ற
வகையில் ஒன்றினைகின்றனர்,இம் மக்களின் கூட்டுமன உணர்வினை ஏற்படுத்தி சமூக உறுதிப்பாட்டின்
ஊடாக சமாதானமான சமூகத்தினை உருவாக்கப்படுகின்றது. மற்றும் மக்களிடம் மன எழுச்சிசார்
இதமான நிலை, சமூக உறுதிப்பாடு, சமூக கட்டுப்பாடும், சமூக இசைவு, நாளாந்த வாழ்வுக்கு
வழிகாட்டுதல் போன்ற பெறுமதிகளை தருவதாக வனத்து சின்னப்பர் வழிபாடானது மலையகத்தில்
அமைந்துள்ளது.