Abstract:
மலையகத் தமிழ்ச் சமூக உருவாக்கமானது, பெருந்தோட்டத் தொழிலாளர்களைத் தளமாகக் கொண்டு
உருவாக்கம் பெற்றிருந்தாலும் அச்சமூகத்துள் ஏற்பட்டுவரும் மேல்நோக்கிய அசைவியக்கம் காரணமாக
தொழிலாளர் என்ற வர்க்கத் தட்டில் இருந்து மத்தியதர வர்க்கமொன்றும் உருவாக்கம் பெற்றுள்ளது.
பெருந்தோட்டத் தமிழரிடத்தே ஏற்பட்ட கல்விவிருத்தி, அரசியல் அபிவிருத்தி, பொருளாதாரவிருத்தி, சமூகஅரசியல் இயக்கங்களின் செயற்பாடுகள், தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை மற்றும்
தனியார்மயமாக்கப்பட்டமை, பிரஜாவுரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டமை போன்ற பல காரணங்களால்
அச்சமூகத்தில் பலமான மத்தியதர வர்க்கமொன்று மேற்கிளம்பியுள்ளது. அச்சமூகமாற்றம் மலையகத்
தமிழ்ச்சமூக வாழ்விலும் இலக்கியப் போக்கிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இம்மாற்றங்கள்
குறித்த அறிதல் மலையகத் தமிழ்ச் சமூக வளர்ச்சி, மலையகத் தமிழ் இலக்கியச் செல்நெறி போன்றவற்றை
அறிந்துகொள்ளத் துணைபுரியும். அவ்வகையில் இந்த ஆய்வானது, சிறுகதைகளில் மலையக மத்தியதர
வர்க்கம் பற்றி எவ்வாறான பதிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலையக மத்தியதர வர்க்கம் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ள சிறுகதைகளை
முதன்மை ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த ஆய்வு, இரண்டாம்நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு
பண்புசார் ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகள் உள்ளடக்க பகுப்பாய்வு முறையில் விபரண
அணுகுமுறையின்கீழ் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மலையகத்தில் மேற்கிளம்பிய மத்தியதர
வர்க்கம் இரண்டு பின்புலங்களிலிருந்து மேற்கிளம்பியுள்ளன என்பதைக் கண்டுகொள்ளமுடிகின்றது. ஒன்று,
தோட்டத்தின் இடைநிலைப் பணியாளர்களாக விளங்கிய பெரிய கங்காணிகள், டீமேக்கர்கள், எழுதுவினைஞர்கள்,
தொழிற்சாலை அலுவலர்கள், தட்டெழுத்தாளர்கள், உதவி மருத்துவர்கள், மேற்பார்வையாளர்கள்,
கணக்கப்பிள்ளை, சாரதிகள் போன்றோர் மத்தியதர வர்க்கத்தினராக மாறியுள்ளனர். இரண்டாவது, கற்று
உயர்தொழில்களைப் பெற்றதன் மூலம் மத்தியதர வர்க்கத்தினராக உயர்ந்துள்ளனர். இப்பிரிவில் ஆரம்பத்தில்
பெரிய கங்காணி, கணக்கப்பிள்ளை போன்ற இடைநிலைப் பணியாளர்களின் பிள்ளைகளே முன்னணி
வகித்துள்ளனர். அவர்களுக்கே தோட்டங்களை அண்டிய நகரங்களிலும் நாட்டினுடைய பெருநகரங்களிலும்
சென்று கல்வி பெறுவதற்கான வாய்ப்பு இருந்துள்ளது. இந்நிலையில் பிந்திய காலத்தே மாற்றங்கள் ஏற்பட்டன.
சாதாரண தொழிலாளியின் பிள்ளைகளும் கல்வி கற்று பெருந்தோட்ட எல்லைகளைத் தாண்டி அரச மற்றும்
தனியார் துறைகளில் உயர் பதவிகளைப் பெற்று மத்தியதர வர்க்கமாக உயர்ந்துள்ளனர். இடைநிலைப்
பணியாளர்கள் தொழிலாளர்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் அராஜகவாதிகளாக விளங்கியுள்ளதோடு
தோட்டமக்களிலிருந்து ஓர் அந்நியத் தன்மையைப் பேண முனைந்துள்ளனர். தோட்டத்தொழிலாளர்
குழுமத்திலிருந்து மத்தியதர வர்க்கமாக மேற்கிளம்பியவர்கள் பொருளாதாரரீதியாக வளம்பெற்று நகரங்களில்
வாழ்வதோடு அவர்களும் தோட்டங்களுடனான தொடர்பினைப் பேண விரும்பாததோடு ஓர் இடைவெளியையும்
வளர்த்து வந்துள்ளனர். இம்மத்தியதர குழுமத்தின் வாழ்வும் எதிர்பார்ப்பும் தொழிலாளர் வாழ்விலிருந்து பெரிதும்
மாற்றங்கண்டுள்ளன. இத்தகைய பதிவுகளே சிறுகதைகளில் அதிகம் வெளிப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்
தொழிலாளர் பற்றிய இலக்கியப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில் புதிய மத்தியதரவர்க்கம் பற்றிய மொத்தப்
பதிவுகளும் இன்னும் இலக்கிய வெளியில் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டில்லை. இதற்கு மலையகத் தமிழர்
யார், எவர் என்ற சரியான புரிதல் இன்மையே அடிப்படைக் காரணமாக அமைகின்றது எனலாம். மலையகத்
தமிழரின் சமூக அசைவியக்கம் குறித்த தெளிவு ஏற்படுமிடத்து இந்த இடைவெளி பூரணப்படுத்தப்படும்.