Abstract:
இலங்கையில் காணப்படும் அராபிய சிலாசாசனங்கள் இந்நாட்டில் காணப்படும் ஏனையவற்றுடன்
ஒப்பிடப்படும் பொழுது அவை தொகையளவில் சிறிதேயாயினும், 7 ஆம் நூற்றாண்டிலிருந்து
அதிசயிக்கத்தக்க வேகத்துடன் பரவிய இஸ்லாத்தின் விளைவாக இப்பிரந்தியத்தில் ஏற்பட்ட
பரந்தவொரு இன, மொழிச் செல்வாக்கின் ஒரு பகுதியே ஆகும். எனவே இந்நாட்டின் ஆரம்பகால
அராபியக் குடியிருப்பாளர்களைப் பற்றிய தகவல்களை மட்டுமல்லாது, தெற்காசியப் பிராந்தியத்தில்
அவர்கள் மேற்கொண்ட கப்பற் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைப் பற்றியூம்,
இந்நாட்டுக்கு அடிக்கடி வருகை தந்த இஸ்லாமிய மதத் தலைவர்களதும் அவர்களது கலாசார
செல்வாக்குகள் தொடர்பானதுமான தகவல்களையும் இச்சிலாசாசனங்கள் தருகின்றன. இந்நாட்டின்
கரையோர பட்டினங்களான காலி, பேருவளை, கொழும்பு, மன்னார், திருகோணமலை ஆகிய
இடங்களில் மட்டுமல்லாது, பண்டைக்கால நகர வாழ்க்கையின் மத்திய தலங்கலாயிருந்த நாட்டின்
உட்பிரதேசங்களிலும் இச்சிலாசாசனங்கள் காணப்படுகின்றன. புத்தளம் - அனுராதபுரம் வீதி,
குருநாகலை - புத்தளம் வீதி, பலங்கொடைக்குகை, பாவா ஆதம் மலை எனும் இடங்களில்
காணப்படும் சிலாசாசனங்கள் நாட்டின் உட்பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன. ஆகையால்
பண்டைக் காலத்தில் பல்வேறு தேசத்தினருடன் இந்நாடு கொண்டிருந்த வர்த்தக, கலாசாரத்
தொடர்புகளை மட்டுமன்றி, வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் எண்ணப்பாங்குகளையும்
கொண்டிருந்த பல்வேறு மக்களிடையே சகிப்புத்தன்மையும், சமரச வாழ்க்கையும் நிருவியதையும்
இவை காட்டுகின்றன. இலக்கிய மூலாதாரங்கள் சில குறைபாடுகளையுடையவை என்ற
காரணத்தினால், இச்சிலாசாசனச் சான்றுகள் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றன.