Abstract:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகக் கொள்ளப்பட்டுள்ள காவியங்கள், சிற்றிலக்கியங்கள், அரபு,
பாரசீக வழிவந்த இலக்கியங்கள், அறபுத்தமிழ் இலக்கியங்கள் முதலியவற்றில் நபிமார்கள்.
அவ்லியாக்கள், மற்றும் சில பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகள்இ இஸ்லாமிய வரலாற்றில்
இடம்பெற்ற சில போர்கள், இறைவன், நபிகளார் மற்றும் சில பெரியோர்களின் புகழ். மார்க்க
சம்பந்தமான சில விடயங்கள். சூபித்துவ சிந்தனைகள் முதலிய விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
இவ்விலக்கியங்களையே அறிஞர்கள் பலரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எனப்
போற்றுகின்றனர். இஸ்லாமிய இலக்கியம் என்றால் என்ன என்ற கோட்பாட்டோடு
இவ்விலக்கியங்களைப் பொருத்திப் பார்க்கும்போது, இவற்றில் அதிகமான குறைபாடுகள்
காணப்படுகின்றன. இவ்விலக்கியங்களில், அல்லாஹ் கூறாத விடயங்களை அல்லாஹ் கூறினான்
என்றும் நபிகளார் கூறாத விடயங்களை நபிகளார் கூறினார்கள் என்றும் கற்பனை செய்து
உரைத்தல். ஏகத்துவக் கோட்பாட்டோடு முரண்படல், பிற மதக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு
அதனை இஸ்லாம் கூறுவதாக உரைத்தல், தமிழ் இலக்கிய மரபை முற்று முழுதாக தழுவி எழுத
முற்படல், உண்மையைக் காட்டிலும் கற்பனைக்கு முக்கியத்துவம் வழங்குதல், உண்மைப்
பாத்திரங்களைக் கொண்டு இலக்கியங்களைப் படைக்கும் போது இலக்கிய ரசனை எனும்
ஒன்றிற்காக இடையிடையே கற்பனைப் பாத்திரங்களையும் உருவாக்கல், நபிமார்கள்,
நபித்தோழர்களின் வரலாறுகளை இலக்கியங்களாகப் படைக்கும்போது அவற்றில் போலியான
சம்பவங்களையும் இணைத்துக் கூறல், நபிகளாரின் வரலாற்றில் நடந்த சில அற்புதங்களை
நபித்தோழர்களின் வரலாற்றிலும் நடந்ததாக உரைத்தல் முதலிய இன்னோரன்ன குறைபாடுகளை
அடையாளப்படுத்த முடியும். இவ்வாய்வானது அல்லாஹ் கூறாத விடயங்களை அல்லாஹ் கூறினான்
என்று கற்பனை செய்து பாடியுள்ள விடயங்களை அடையாளப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இவ்விலக்கியங்களைப் படிக்கும் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாம் தொடர்பான பிழையான
கருத்துக்களை உள்வாங்குவதற்கு இவை சாதகமான சூழலை உருவாக்குகின்றன. சமயத்தை
சரியான முறையில் இஸ்லாமிய இலக்கியங்கள் பிரதிபலிக்கத் தவறி விட்டன என்பதை எடுத்துக்
காட்டி, இஸ்லாமிய இலக்கியம் படைப்போருக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவே
இவவாய்வு அமைந்துள்ளது. இராஜநாயகம், புதுகுஷ்ஷாம், சீறாப்புராணம்இ ஆயிரம் மஸ்அலா
எனும் அதிசய புராணம், சின்னச்சீறா, திருநெறி நீதம் முதலிய நூல்களை அடிப்படையாகக்
கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முதலாம் நிலைத் தரவாக
அல்குர்ஆன் மற்றும் இராஜநாயகம், புதுகுஷ்ஷாம், சீறாப்புராணம், ஆயிரம் மஸ்அலா எனும்
அதிசய புராணம்இ சின்னச்சீறா, திருநெறி நீதம் முதலிய நூல்களும் இரண்டாம் நிலைத் தரவாக
இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக மரபு சார்ந்த
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை நோக்கும் போது அவற்றில் வஹி தொடர்பான கற்பனைகள்
அதிகமாகக் காணப்படுகின்றன.