Abstract:
மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளம். அதன் மூலமே அந்தச் சமூகம் தனது
தனித்துவத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றது. சிலவேளைகளில் தனது தாய்
மொழியை விட்டு சில காரணங்களுக்காக பிறமொழி ஒன்றைச் சார்திருக்கும் நிலையும் ஏற்படலாம்.
ஆயினும் தனது தாய்மொழியை விட்டு விலக முடியாத ஒரு நிலை எல்லாச் சூழ்நிலையிலும்
ஏற்படும் என்பது இயல்பாகும். இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்களது தாய்மொழி
தமிழாகும். தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு பிறப்பு முதலே ஆரம்பமாகி விடுகின்றது.
உலக மொழிகளில் தமிழுக்கென்று தனித்துவமான சிறப்புண்டு. அது பன்னெடுங்காலமாக வாழ்ந்த
ஆட்சி மொழி. பல நாகரிகங்கள் தோன்றியும் மறைந்தும் போன கால கட்டத்திலெல்லாம் தமிழ்
வாழ்ந்தது மட்டுமல்லாது, தனக்கான கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வளர்த்து வந்துள்ளது.
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையைச் சேர்ந்த ஓ.எம். பாஸி ஆலிம் பல
அறபு மொழிசார் நூல்களுக்குச் சொந்தக்காரர். அவரால் அறபு மொழி கற்பித்தலுக்கான
“தத்ரீஷுல் குர்ஆன்” என்ற நூல் 1963 இல் வெளியிடப்பட்டது. இந்நூல் அறபுத் தமிழ் கலவையாக
எழுதப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் சமய, பொருளாதார, சமூக மற்றும் மொழியியல்
காரணிகளால் அறபு மொழியை பல நூற்றாண்டு காலமாக கற்று வருகின்றனர். இவ்வாய்வு,
இலங்கையில் அறபு மொழி கற்பித்தலுக்கான தேவையினை கண்டறிந்து அதன் செல்வாக்கினை
அறிமுகப்படுத்தல், அறபு மொழி கற்பித்தலில் தாய் மொழியின் வகிபங்கினை ஆராய்தல், ஓ.எம்.
பாஸி ஆலிம் அவர்களின் அறபு மொழி கற்பித்தலுக்கான வகிபங்கினை வெளிக்கொணர்ந்து
கற்பித்தல் முறைமையில் தமிழின் செல்வாக்கினை தத்ரீஷுல் குர்ஆன் பாடநூலுக்கூடாக
வெளிப்படுத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அறபு மொழி கற்பித்தல்
என்பது வெறுமனே அம்மொழிக் கூடாக மாத்திரம் நிகழ முடியாது. மாற்றமாக, அது தமிழ் பேசும்
மக்களின் தாய்மொழியான தமிழுக்கூடாகவே அதன் செல்வாக்குடனேயே நிகழ முடியும் என்பதனை
இவ்வாய்வு கண்டறிந்துள்ளது. இவ்வாய்வுக்காக விவரண மற்றும் பகுப்பாய்வியல் முறைகள்
பயன்படுத்தப்பட்டன. முதலாம் நிலைத்தரவான நேர்காணல் முறை பயன்படுத்தப்பட்டு தேவையான
தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைள், பத்திரிகைகள்
மற்றும் இணையம் போன்றவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.