Abstract:
திருமண நிகழ்வின் போது பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டார்கள் பெற்றுக் கொள்ளும்
சீர்வரிசைகள் அனைத்தையுமே சீதனம் எனும் கலாசார அம்சம் விளக்குகிறது. இது
தமிழர்களிடமிருந்து பல்லினக் கலப்பு சமூகத்தில் வாழ்கின்றபோது ஏனைய மக்களிடமும் பரவி
விடுகின்றது. இவ்வாறே இஸ்லாமியர்களிடமும் இக்கலாசாரம் உட்புகுந்துள்ளது. எனினும் இக்
கலாசாரத்தினை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. முற்றாக இதனைக் கண்டிக்கிறது.
சமூகத்தில் சீதனம் எனும் கலாசாரம் பின்பற்றப்படுவதனால் பெண்கள் சமூகமும், பெண்வீட்டாரும்
அதிகமான அசௌகரிகங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலை சமூக அரங்கில் ஓர் எதிர்மறை
அசைவினை ஏற்படுத்தி மக்களை இன்னலுக்குள்ளாக்குகின்றது. இதுவே ஆய்வுப் பிரச்சினையாகும்.
சீதனத்தினால் பெண்களும், பெண் வீட்டாரும் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிவதே ஆய்வின்
நோக்கமாகும். ஆய்வுப் பிரதேசத்தில் சீதனம் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும் சீதனத்தினை சமூகவியல் நோக்கில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே
இவ் ஆய்வு இடைவெளியினை பூரணப்படுத்துவதற்காகவே இவ் ஆய்வு இடம்பெற்றது. முதலாம்
நிலைத் தரவுகளைப் பெறுவதற்காக கட்டமைக்கப்படாத நேர்காணல் 50 நபர்களிடமும், 2 இலக்குக்
குழுக் கலந்துரையால்களும், நேரடி அவதானிப்பும் இடம்பெற்றன. இரண்டாம் நிலைத்
தரவுகளுக்காக நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளக் கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்
ஆய்வினூடாகக் கண்டறியப்பட்ட பிரதான முடிவு என்னவெனில் சீதனத்தினால் பெண்களும். பெண்
வீட்டாரும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு வாழ்வில் ஓர் பிடிப்பற்ற,
விரக்தி நிலை தோன்றுகின்றது என்பதாகும். எனவே இவற்றினை தொடரவிடாது சமூகத்தை சீரிய
சிந்தனையினாலும். செயற்பாடுகளினாலும் செம்மைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.