Abstract:
இஸ்லாத்தில் திருமண ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான ஓர் அடிப்படை அம்சமாக மஹர்
காணப்படுகின்றது. இது குறித்த இஸ்லாத்தின் போதனைகள் முஸ்லிம் உம்மத்திற்கான பொதுக்
கோட்பாடாக இருப்பினும் மஹருடன் தொடர்பான இஸ்லாமிய நியமங்கள் பற்றிய புரிதலின்மையும்,
தாம் வாழும் நாடுகளின் பிற சமூக கலாசாரங்களின் தாக்கங்களும் இஸ்லாமிய கோட்பாடுகளையும்
நடைமுறைகளையும் பின்பற்றுவதில் முஸ்லிம்கள் மத்தியில் பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
இப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை மாவட்டதில் அமைந்துள்ள பாலமுனை-
2ம் பிரதேச முஸ்லிம்களின் திருமணத்தில் உள்ள மஹர் நடைமுறையை இஸ்லாமிய
நியமங்களுடன் ஒப்பிட்டு விளக்குவதனை ஆய்வின் நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஒரு பண்புசார் ஆய்வாக அமைந்துள்ளதுடன்
இவ்வாய்வுக்காக வினாக் கொத்து, நேர்காணல் மற்றும் குழுக்கலந்துரையாடல் போன்ற முதலாம்
நிலைத் தரவு மூலங்களிலிருந்தும் ஆய்வுடன் தொடர்பான அறிக்கைகள், நூற்கள்இ,
ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவவு மூலங்களிலிருந்தும்
தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவு மூலங்களைக் கொண்டு பெறப்பட்ட
தகவல்கள் SPSS மென்பொருளின் துணையூடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு விபரணப் புள்ளி
விபரவியல் முறை மூலம் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் மஹரில் பெண்ணின் உரிமை,
அதன் அளவவு, மஹர் வழங்கப்படும் முறை. வழங்கப்படும் பொருள் போன்றவற்றில் இஸ்லாத்தின்
மஹர் தொடர்பான கோட்பாட்டிற்கு மாற்றமான நடைமுறை அம்சங்கள் இழையோடியுள்ளன என்பது
கண்டறியப்பட்டுள்ளது.