Abstract:
கல்வியே ஒரு சமூகத்தின் அடையாளம். கல்வி உருவாக்கும் மனிதர்களே நாளை அந்த
சமூகத்தை ஆளும் தலைவர்களாக உருவாகிறார்கள். மாணவர்களது கல்விமட்டத்தை அளவிட
இலங்கை அரசினால் நடாத்தப்படும் தேசிய பரீட்சைகளின் வரிசையில் கல்விப் பொது தராதர
சாதாரணதர பரீட்சை மிக முக்கியமானதாகும். பாடசாலை மாணவர்கள் கல்விப் பொது தராதர
சாதாரணதர பரீட்சையில் அரபுமொழிப் பாடத்தைத் தேர்வு செய்யாமைக்கான காரணிகளைக்
கண்டறிதல் என்ற நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பாடத்தைத் தெரிவு
செய்வதற்காக சகல நியாயங்களும் காணப்பட்ட போதிலும் மாணவர்கள் இப்பாடத்தைத் தெரிவு
செய்யாமையானது இவ்வாய்வின் பின்னணியாகவும், பிரச்சினையாகவும் கருதப்பட்டது. இவ்வாய்வின்
முதலாம் நிலை தரவுகளாக வினாக்கொத்து, கலந்துரையாடல், நேர்காணல் ஆகிய மூலங்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தரவுகள் ஆய்வின் தேவைகளுக்கேற்ப புத்தகங்கள்,
இடாப்பு பதிவுகள், பதிவேடுகள் என பல்வேறு நூல்களிலிருந்தும் பெறப்பட்டன. இந்த சமூகவியல்
பண்புசார் ஆய்வானது SPSS, EXCEL முறைகளின் ஊடாக தரவுகளை பகுப்பாய்வு செய்து
மாணவர்களின் பாடம் குறித்த பயம், அறிமுகமின்மை, வழிகாட்டலின்மை என்பன குறித்த பாடத்தை
தெரிவு செய்யாமைக்கான காரணிகளாக இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அறிமுக
நிகழ்வு(Orientation), வழிகாட்டல், தரம் ஆறு முதல் குறித்த பாடத்தினை உள்வாங்குதல் ஆகியன
ஆய்வின் பரிந்துரைகளாக சிபாரிசு செய்யப்பட்டன.